×

ஈரோட்டின் அடையாளமாக மாறிய இட்லி சந்தை!

நன்றி குங்குமம் தோழி

காய்கறி சந்தை, மலர் சந்தை, ஆடு, மாடுகளுக்கான சந்தை என பல சந்தைகளை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இட்லிக்காகவே மட்டும் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஒரு சந்தை இயங்கிக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் இட்லிக்கு என தனிச் சந்தை ஈரோட்டில் உள்ள கருக்கல்பாளையத்தில் உள்ளது. இங்கு தினமும் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இட்லிகள் விற்பனையாகிறது. முகூர்த்த நாட்களில் 1 லட்சம் வரை கூட விற்பனையாகும். ஒரு நாளில் ஆயிரக்கணக்கான இட்லிகள் விற்பனையாவதாலேயே இந்தப் பகுதியை இட்லி சந்தை என அழைக்கின்றனர் அந்த மாவட்டத்து மக்கள். இந்த ஊருக்கு இட்லி சந்தை என பெயர் வர அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது.

60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இட்லி சந்தை அமைக்கும் முன் இந்தப் பகுதியில் மாட்டுச் சந்தை இருந்துள்ளது. ஈரோடு கருங்காலய மாட்டுச் சந்தை மிகவும் பிரபலம். பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்து இந்தப் பகுதியில் மாடுகளை வாங்கி செல்வார்கள். அவர்களின் பசியை போக்கவே இங்கு இட்லி கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. விடியற் காலையில் சந்தைக்கு வருபவர்கள் இங்கு இட்லி சாப்பிடுவது மட்டுமில்லாமல் தங்கள் வீட்டிற்கும் பார்சல் வாங்கி செல்ல ஆரம்பித்தார்கள். பலர் இங்கு இட்லி சாப்பிடவே வரத் துவங்கினார்கள். அன்றைய காலகட்டத்தில் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே வீடுகளில் இட்லி செய்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.

மாட்டுச் சந்தையில் சுடச்சுட இட்லி கிடைப்பதால் வெளியூர்களில் இருந்து மாட்டுச் சந்தைக்கு வரும் வியாபாரிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் இட்லியை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தனர். அதிகாலையில் ஆவி பறக்க இறக்கி வைக்கப்படும் இட்லிகளை சுவைத்த பிறகுதான் விற்பனை துவங்கும். மக்களின் கூட்டம் அதிகரிக்கவே இட்லி கடைகளும் விரிவானது. இட்லி சந்தை உருவாகும் முன், இட்லிகளை வீட்டில் தயாரித்து அதனை வீதிகளில் விற்பனை செய்ததுதான் இந்த இட்லி சந்தையின் துவக்கம் என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு இங்கு கடைகள் அமைக்கப்பட்டன. பிறகு இந்தப் பகுதி முழுக்க முழுக்க இட்லி சந்தையாகவே மாறிவிட்டது. தற்போது மாட்டுச் சந்தை இடம் மாறிய போதிலும் இந்தப்
பகுதியில் இட்லி சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது.

இட்லி சந்தை பிரபலமடைந்ததால், ஈரோடு மற்றும் அருகில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடக்கும் திருமணம், கோயில் விழாக்கள் பலவற்றுக்கும் காலை உணவுக்கு இங்கிருந்துதான் இட்லி சப்ளை செய்யப்படுகிறது. மேலும் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களுக்கு இங்கிருந்துதான் இட்லி எடுத்துச் செல்லப்படுகிறது. விருதுநகர் பரோட்டா, பழநி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஊட்டி வர்க்கி வரிசையில் ஈரோட்டின் அடையாளமாக இட்லி சந்தை மாறியுள்ளது.

இது குறித்து இட்லி சந்தையில் கடை வைத்திருக்கும் பிரவீன்குமாரிடம் பேசும் போது, ‘‘என் பாட்டி தொடங்கிய கடை. அவரைத் தொடர்ந்து அவரின் மகன், மகள் வரிசையில் தற்போது நான் இந்தக் கடையினை நிர்வகித்து வருகிறேன். பாட்டி சொல்லிக் கொடுத்த இட்லி செய்முறையைதான் இன்றுவரை பின்பற்றி வருகிறோம். ஒரே தரத்திலும் ஒரே சுவையிலும் இட்லிகளை செய்வதால்தான் இப்போது வரை மக்கள் எங்கள் கடைகளை தேடி வருகிறார்கள்.

கருக்கல்பாளையம் மெயின் ரோட்டில் மொத்தம் பத்து இட்லி கடைகள் உள்ளன. இட்லிதான் பிரதான உணவு. அதனாலேயே இங்கு எல்லா நேரத்திலும் இட்லிகள் கிடைக்கும். அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சுடச்சுட இட்லிகள் இங்கு கிடைக்கும். பாட்டி காலகட்டத்தில் ஒரு இட்லி 75 பைசாவிற்கு விற்கப்பட்டது.

தற்போது 8 ரூபாய்க்கு விற்கிறோம். இதற்கு தக்காளி குருமா, தேங்காய் சட்னி, காரச் சட்னி என அனைத்தும் கொடுக்கிறோம். எந்நேரமும் இட்லி கிடைக்கும் என்பதால் மருத்துவமனைகள், ஹோட்டல்கள், கடைகள், வீட்டு விசேஷங்கள், பள்ளி, கல்லூரி விடுதிகள், அரசியல் கூட்டங்கள் என அனைத்து இடங்களுக்கும் நாங்கள் இட்லி தயாரித்து கொடுத்து வருகிறோம். சபரிமலை, பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட எங்களிடம் இட்லி பொட்டலங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

வீடுகள்ல இட்லிக்கு மாவு அரைக்கும் போது, வெந்தயம் சேர்ப்பது வழக்கம். நாங்க வெந்தயத்துக்கு பதிலா ஆமணக்கு சேர்க்கிறோம். இட்லி பாத்திரத்தில் துணியை விரித்து அதில்தான் இட்லியை வேகவைப்போம். இட்லி துணியில் ஒட்டாமல், பூ போல மென்மையாக இருக்கும். குஷ்பு இட்லி, கப் இட்லி, ஹார்ட்டின் இட்லி, இளநீர் இட்லி மட்டுமில்லாமல் ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி, புதினா மசாலா வைச்ச சாண்ட்விச் இட்லி, சீரகம், மிளகு, கொத்தமல்லி சேர்ந்த காஞ்சிபுரம் இட்லினு அனைத்து வகை இட்லிகளும் இங்கு கிடைக்கும். சிறப்பு வகை இட்லிகள் வேண்டும் என்றால் ஆர்டரின் பேரில்தான் செய்து தருகிறோம்.

ஒரு போதும் பழைய மாவு, புளிச்ச மாவுகளில் இட்லியை தயாரிக்க மாட்டோம். அதே மாதிரி காலை மிச்சமான இட்லியை மாலையில் விற்க மாட்டோம். இட்லி அரிசி, உளுந்து, ஆமணக்கு பயன்படுத்தி இட்லிகளை செய்து வருகிறோம். அன்று முதல் இன்று வரை பாட்டி சொன்ன அளவில்தான் இட்லி மாவினை தயாரிப்பதால், இவ்வளவு ஆண்டு ஆகியும் ஒரே மாதிரியான இட்லிகளை செய்ய முடிகிறது. தொடர்ந்து இந்தியா முழுவதும் எங்களுடைய இட்லிகளை கொண்டு செல்ல வேண்டும்’’ என்கிறார் பிரவீன்குமார்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post ஈரோட்டின் அடையாளமாக மாறிய இட்லி சந்தை! appeared first on Dinakaran.

Tags : Idlik ,Tamil Nadu ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...