காஸ் ஏஜென்சி பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி போலி பத்திரிகையாளர் வராகி மீது மேலும் ஒரு வழக்கு: எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

சென்னை: காஸ் ஏஜென்ஸி பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக போலி பத்திரிகையாளரான வராகி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் (46) என்பவர் கூடுவாஞ்சேரி சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்ற கிருஷ்ணகுமார் (50) என்பவர் தன்னை ஒரு சீனியர் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் ஆதாரமில்லாமல் பேசி மிரட்டி வருவதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வராகி என்பவர் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.

இதனையடுத்து மயிலாப்பூர் போலீசார் வராகியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டதும் தொடர்ந்து அவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு புகார்களை அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜன் என்பவரும் வராகி மீது புகார் அளித்தார். அதில், கொரோனா காலகட்டத்தில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பல கோடி ஊழல் நடைபெற்றதாகக் கூறி வராகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் வாட்ஸ்அப் கால் மூலம் தன்னை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இதுகுறித்தும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இவர் மீது தாம்பரம் சார் பதிவாளர் பாடலிங்கத்தை மிரட்டி ரூ.50 லட்சம், சேலையூர் சார்பதிவாளர் மஞ்சுவை மிரட்டி ரூ.30 லட்சம், எழும்பூரில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த டாக்டர் ஒருவரை மிரட்டி ரூ.10 லட்சம் என பலரை மிரட்டி இவர் பணம் பறித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் வராகியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தருவதற்காக சென்னை போலீசார் பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிவித்து அதில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறியிருந்தனர். அந்த வகையில் வராகி கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது 20க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. தொடர்ந்து அதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் கிழக்கு அவென்யூ சாலையைச் சேர்ந்த சாரதி (47) என்ற வழக்கறிஞர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.

அதில், தன்னை மூத்த பத்திரிகையாளர் எனக்கூறி வராகி மற்றும் அவருடன் இருந்த 3 பேர் ஒன்றிய அரசில் தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், இதனால் எளிதில் பலருக்கும் காஸ் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முடித்து கொடுத்துள்ளதாகவும் கூறி சாரதியிடமிருந்து சென்ற ஆண்டு பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு அதன் பிறகு காஸ் ஏஜென்சி சம்பந்தமான எந்த ஒரு ஏஜென்சி உரிமையும் பெற்று தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சாரதி பலமுறை கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி எனக்கு போலீஸ் உயரதிகாரிகள் நன்கு தெரியும் என்னை எதுவும் செய்ய முடியாது எனக்கூறி ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாக வராகி மிரட்டியுள்ளார். இதனால் அப்போது அவருக்கு பயந்துதான் புகார் அளிக்கவில்லை எனவும், தற்போது அவர் மீது பலரும் புகார் கொடுத்து வருவதால் இந்த புகாரை கொடுப்பதாகவும் சாரதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காஸ் ஏஜென்சி பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி போலி பத்திரிகையாளர் வராகி மீது மேலும் ஒரு வழக்கு: எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: