இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சேவையை தொடங்க திட்டம் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் தயார்: விரைவில் பூந்தமல்லி பணிமனைக்கு வருகிறது

சென்னை: ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக தயார் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2ம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடியில் வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை உள்ளடங்கும்.

இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை உற்பத்தியாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. முதல் மெட்ரோ ரயில் பெட்டிக்கான உற்பத்தி தொடங்கிய நிலையில் பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து முதல் மெட்ரோ ரயிலுக்கான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிலையில் ஒட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் சோதனை தடத்திற்கு மாற்றப்பட்டது. உற்பத்தியாளர் வளாகத்தில் அனைத்து நிலையான சோதனைகளும் முடிந்த பின்னர், மெட்ரோ ரயில் பூந்தமல்லி பணிமனைக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்ற பிறகு பயணிகளின் சேவையை தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் சைனி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் மற்றும் பொது ஆலோசகலர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சேவையை தொடங்க திட்டம் ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில் தயார்: விரைவில் பூந்தமல்லி பணிமனைக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: