இப்பகுதியில் நள்ளிரவில் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு விவசாய கூலித்தொழிலாளிகளான பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்த கரிபிரான்(65), சின்ன மூக்கனூரை சேர்ந்த சிங்காரம்(40) ஆகிய இருவரும் நாட்டுத் துப்பாக்கியுடன் பெருமாப்பட்டு பகுதியில் உள்ள ஏலகிரி மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர்.
அப்போது சிங்காரத்துடன் 9ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் லோகேசும்(15) சென்றுள்ளார். பெருமாபட்டு காளியம்மன் கோயில் வட்டம் பகுதியைச் சேர்ந்த முருகனின் விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதை கவனிக்காமல் கரிபிரான், சிங்காரம், லோகேஷ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து வேலியை மிதித்துள்ளனர். இதில் மின்சாரம் பாய்ந்து மூவரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக பலியாகினர். நேற்று காலை அவ்வழியாக சென்ற சிலர் 3 பேரும் உயிரிழந்து கிடந்ததை பார்த்து குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து 3 பேரின் சடலங்களையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், முருகனின் விவசாய நிலத்தில் காளியம்மன் கோவில் வட்டத்தை சேர்ந்த நீதி(55) என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாட மின் வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நீதியை கைது செய்த போலீசார், திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post நள்ளிரவு வேட்டைக்கு சென்றபோது பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.