×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 4 கடைகளுக்குள் புகுந்த ஆம்னி பேருந்து: டிரைவர் கைது; பைக், மின்கம்பம் சேதம்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஐயஞ்சேரி பிரதான சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த 4 கடைகள், 4 பைக் மற்றும் மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார். 4 பைக்குகள் மற்றும் கடைகள் சேதமாகின. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் பல்வேறு தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. ந்நிலையில், நேற்றிரவு சென்னை கிண்டியில் இருந்து ஊட்டிக்கு 21 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் ஆம்னி பேருந்து கிளம்பியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வழக்கமாக தனியார் ஆம்னி பேருந்துகள் ஐயஞ்சேரி பிரதான சாலை வழியாக உள்ளே செல்ல வேண்டும். எனினும், நேற்று நள்ளிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஊட்டி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறான வேகத்தில் வந்தது. பின்னர் அப்பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஐயஞ்சேரி பிரதான சாலையில் உள்ள ஓட்டல், மெக்கானிக் கடை உள்பட 4 கடைகளுக்குள் திடீரென வேகமாக புகுந்தது.

இதில் ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார். மேலும், அங்கு நின்றிருந்த 4 பைக்குகள் மற்றும் கடைகள் பலத்த சேதமடைந்தன. பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி தனியார் ஆம்னி பேருந்து நின்றது. பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பயணிகளை ஏணி மூலம் அக்கம்பக்கத்தினர் மீட்டனர். பின்னர் அப்பேருந்தை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மதுபோதையில் ஆம்னி பேருந்தை ஓட்டி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் சிக்கி சேதமான ஆம்னி பேருந்தை கிரேன் உதவியுடன் அகற்றினர். அங்கு ஆம்னி பேருந்து மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும், அப்பகுதியில் இன்று காலை வரை மீண்டும் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள கடைக்காரர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்புகாரின்பேரில் தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பெரியகுளம் பகுதியை சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து டிரைவர் செல்வராஜ் (44) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 4 கடைகளுக்குள் புகுந்த ஆம்னி பேருந்து: டிரைவர் கைது; பைக், மின்கம்பம் சேதம் appeared first on Dinakaran.

Tags : Omni ,Clambakkam ,Guduvanchery ,Iyancherry ,Klambakkam bus ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம்...