×

செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர்

செங்கோட்டை: செங்கோட்டை அருகே நேற்று அதிகாலையில் ஊருக்குள் 4 யானைகள் புகுந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை பணியாளர்கள் விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
செங்கோட்டை அருகே வடகரை பகுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீ.ப.தெரு, உ.மு.சந்து, காவல்கார தெரு, சாம்பவர் காலனி ஆகிய பகுதிகளில் 4 யானைகள் புகுந்து சுற்றி வந்தன. தொடர்ந்து அங்கிருந்த தென்னை மரத்தை சாய்த்ததுடன் வேலி கற்களை உடைத்து தள்ளின. இதைப் பார்த்ததும் அங்கிருந்த கிராம மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் சுரேஷ் அறிவுறுத்தலின்படி வனவர் முருகேசன் மற்றும் வனக்காப்பாளர்கள் செல்லத்துரை, ஐயப்பன், பெருமாள், ஜோசுவா, கலைச்செல்வன், வனக்காவலர் முத்துமாணிக்கம், சத்யா, ஜெயசீலன் ஆகியோர் அடங்கிய வனக் குழுவினர் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து இங்கு சுற்றித்திரிந்த 4 யானைகளையும் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து கூட்டாக சத்தம் எழுப்பியும் 2 மணி நேரம் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து சுற்றி வருவதால் மீண்டும் இவை வரக்கூடும் என இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். கடந்த மாதம் கரிசல்குடியிருப்பு ஊருக்குள் யானை ஒன்று புகுந்தது. கடந்த வாரம் இரு யானைகள் வடகரை குளத்தில் குளியல் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து சோலார் மின்வேலிகள், அகலிகள் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post செங்கோட்டை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகள்: வனத்துறையினர் போராடி காட்டுக்குள் விரட்டினர் appeared first on Dinakaran.

Tags : Sengkot ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை அருகே மினி லாரி மோதி திமுக பிரதிநிதி பலி