சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராமை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கியுள்ளார். புதிய தலைமை நீதிபதி ராம் மும்பையில் பிறந்தவர். நிதிக் கணக்கியல் மற்றும் நிர்வாகத்தில் பி.காம் மற்றும் எல்.எல்.பி முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து எல்.எல்.எம். (கடல் சட்டம்), லண்டன் கிங்ஸ் கல்லூரியில் எல்.எல்.எம். தகுதியில் பட்டம் பெற்றவர். கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். துறைமுகச் சட்டங்கள், சுங்கச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம், கடல் காப்பீடு (மறு காப்பீடு) வழக்குகள், ரிட் வழக்குகளில் அதிக நிபுணத்துவம் பெற்றவர். தனிப்பட்ட முறையில், நீதிபதி ஸ்ரீராம் சமூக ரீதியான சேவைகளில் தீவிரமாக ஈடுபடுபவர். பல ஆண்டுகளாக அவர் தர்மிஷ்டா மித்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார்.

அந்த தொண்டு நிறுவனம் இறந்தவர்களுக்கு அர்ச்சனை மற்றும் ‘ஷ்ராத்’ செய்யும் மையங்களை நடத்துகிறது. கடந்த 2013 ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2016 மார்ச்சில் நிரந்தர நீதிபதியானார். இதேபோல், மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா, உயர் நீதிமன்ற பதிவாளர் எம்.ஜோதிராமன், மாவட்ட நீதிபதி மரியா கிளாட்டி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி ஆணை வெளியிட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதி மற்றும் 3 புதிய நீதிபதிகளையும் சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன. புதிய தலைமை நீதிபதி மற்றும் 3 நீதிபதிகள் இந்த வாரம் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.

The post சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: