ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி


திருச்சி: பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்தாண்டுக்கான பவித்ரோத்சவம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பவித்ரோத்சவ மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

7ம் திருநாளான நேற்று மாலை 6.45 மணிக்கு நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கோயில் கொட்டார வாசலில் எழுந்தருளி இரவு 7 மணிக்கு நெல்லளவு கண்டருளினார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதிக்கு சென்று அங்கு திருவந்திக்காப்பு கண்டருளி, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 8ம் நாளான இன்று மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு பவித்ரோத்சவ மண்டபம் சென்றடைகிறார்.

பின்னர் அலங்கார வகையறா கண்டருளி இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைவார். இதனால் அதிகாலை விஸ்வரூப சேவை கிடையாது. இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவைக்கு அனுமதியில்லை. விழாவின் நிறைவு நாளான, நாளை(22ம் தேதி) காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். நாளை மறுநாள் பெரிய பெருமாள் ரங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Related Stories: