மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

சென்னை : பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கல்வித்துறை கண்டுபிடித்துள்ளது.

அதாவது, முறைகேடாக மாணவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறைகேடுகளை களையும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள் இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையில் இயக்குநர், இணை இயக்கநர் பதவிகளில் உள்ளவர்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். மாதத்திற்கு ஒருமுறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் ஆய்வு செய்து அறிக்கையை 5ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு appeared first on Dinakaran.

Related Stories: