பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி லட்சக்கணக்கான காதி கைவினைஞர்களுக்கு பரிசு: ஒன்றிய கிராம தொழில்கள் ஆணைய தலைவர் வழங்கினார்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் மற்றும் மோடி அரசு 3.0, 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் ஸ்ரீ மனோஜ் குமார், லட்சக்கணக்கான காதி கைவினைஞர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கினார். பூஜ்யபாபுஜியின் பிறந்த இடமான போர்பந்தரில் உள்ள அஸ்மாவதி ஆற்றங்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கைவினைஞர்களான நூற்போர்களின் ஊதியத்தில் 25 சதவீதமும், நெசவாளர்களின் ஊதியத்தில் 7 சதவீதமும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2024 அக்டோபர் 2 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் அமலுக்கு வரும். நிகழ்ச்சியில் ஸ்ரீமனோஜ் குமார் பேசுகையில், ‘‘ஏப்ரல் 1, 2023 முதல் ஒரு சிட்டத்திற்கு ரூ.7.50லிருந்து ரூ.10 ஆக பெற்று வந்த நூற்போர்களின் ஊதிய உயர்வு ஆனது அக்டோபர் 2, 2024 முதல் ஒரு சிட்டத்திற்கு ரூ.10 ல் இருந்து ரூ.12.50 ஆக உயர்த்தப்படுகிறது. கடந்த நிதியாண்டில் காதி வர்த்தகம் ரூ.1.55 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும் ஏறக்குறைய 3,000 பதிவு செய்யப்பட்ட காதி நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 4.98 லட்சம் காதி கைவினைஞர்கள் பணிபுரிகின்றனர், இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். உயர்த்தப்பட்ட ஊதியம் அவர்களுக்குப் புதிய பொருளாதார வலிமையைக் கொடுக்கும்,’’ என்றார்.

நிகழ்வின் போது, அஸ்மாவதி ஆற்றங்கரையில் துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்பட்ட சர்க்காவை கே.வி.ஐ.சி.யின் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 3911 பயனாளிகளின் கணக்குகளில் ரூ.101 கோடி மதிப்புள்ள மானியத் தொகை விநியோகிக்கப்பட்டது. இதன் மூலம் 43,021 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுடன், நாடு முழுவதும் நிறுவப்பட்ட 1100 புதிய பி.எம்.இ.ஜி.பி தொழிற் கூடங்களும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவரால் திறந்து வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், காதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், காதி தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் கே.வி.ஐ.சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி லட்சக்கணக்கான காதி கைவினைஞர்களுக்கு பரிசு: ஒன்றிய கிராம தொழில்கள் ஆணைய தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: