மின் இணைப்பு வழங்க ரூ.1000 லஞ்சம் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஆவடி: புதிய மின் இணைப்பு வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய வழக்கில் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆவடி அடுத்த அண்ணனூர் சோழன் நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் சுரேஷ். இவர் தனது வீட்டில் ஒரு முனை மின்சாரத்தில் இருந்து மும்முனை மின்சாரமாக மாற்றி தரக்கோரி ஆவடி தெற்கு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகினார். அப்போது வணிக ஆய்வாளராக இருந்த சிவக்குமார்(53) ரூ.1000 கொடுத்தால் மட்டுமே மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் கடந்த 2014ல் கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் ரூ.1000 லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். இது சம்பந்தமான வழக்கு திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2015 முதல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கே.மோகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் அண்ணனூரில் வீட்டிற்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய ஆவடி தெற்கு வணிக ஆய்வாளர் சிவகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

The post மின் இணைப்பு வழங்க ரூ.1000 லஞ்சம் வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: