அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா என கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் கிளை, உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை, நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சகா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் சட்டக் கல்வி படிப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆனால், சட்டக் கல்லூரி மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தேனி ஆகிய சட்டக் கல்லூரிகளில் குறைவான முழு நேர விரிவுரையாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கல்லூரிகளில் முழு நேர மற்றும் பகுதிநேர விரிவுரையாளர் பணிகள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்கள் பாடங்களை கற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆசிரியர் வழிகாட்டுதல் இன்றி, மாணவர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.

எனவே, மதுரை, தேனி, காரைக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர விரிவுரையாளர், தற்காலிக விரிவுரையாளர்களை இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி விதிகளின்படி உடனடியாக நிரப்புமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா? புதிய அரசு சட்டக் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டாமா? தமிழ்நாட்டில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தர முதல்வர் இல்லை.

அரசு சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாத நிலையில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே’’ எனக் கேள்வி எழுப்பி, ‘‘தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் எத்தனை விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர்? எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் என்ற விகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் எத்தனை உள்ளது? அதில், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அக். 3க்கு தள்ளி வைத்தனர்.

The post அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: