அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்ததாக திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியான அதிமுகவை சேர்ந்த அமுதா மற்றும் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அதிமுக தலைவர் மனோகரன் மீதான புகார் மீது புதிதாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து 20 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்ததாக திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவியான அதிமுகவைச் சேர்ந்த அமுதா மற்றும் அவரது கணவரும், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருமான மனோகரன் ஆகியோர் மீது மீது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தை சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார், முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ரோஸ்லின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக புதுக்கோட்டை சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட அமுதா மற்றும் மனோகரனுக்கு எதிரான புகார் குறித்து சிபிசிஐடி புதிதாக விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை ஐ.ஜி., மற்றும் டிஐஜி கண்காணிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணையை நீதிமன்றமும் தொடர்ந்து கண்காணிக்கும். இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: