தமிழகம் முழுவதும் 3500 பேர் பங்கேற்பு அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம்

சென்னை: யுஜிசி ஊதிய பங்களிப்புத் தொகையை தரக் கோரி தமிழகம் முழுவதும் அரசு கல்லூரி ஆசிரியர்கள் நேற்று வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். 7வது பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) ஊதிய விகிதத்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை முதல் 39 மாதங்களுக்கு (1.1.2016 முதல் 31.3.2019 வரை) 50 சதவீத பங்களிப்புத்தொகையை வழங்குவதாக ஒன்றிய அரசு உறுதி அளித்திருந்தது. அந்த வகையில் ஒன்றிய அரசின் பங்களிப்பாக தமிழகத்துக்கு வர வேண்டிய ரூ.300 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிதியை உடனடியாக வழங்கக் கோரியும், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவை உடனே அமைப்பது, தேசிய கல்விக்கொள்கை 2020ஐ திரும்பப் பெறுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் 80 அரசு கல்லூரிகளில் நேற்று வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இப் போராட்டத்தில் ஏறத்தாழ 3,500 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சென்னை அரசு கல்லூரிகளில் நடந்த போராட்டத்தில் 650 பேர் கலந்து கொண்டதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் தெரிவித்தார்.

The post தமிழகம் முழுவதும் 3500 பேர் பங்கேற்பு அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் வாயில் முழக்க போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: