×

சைபர் குற்றங்களில் வங்கி கணக்கை முடக்கும் முன் விதிமுறை வகுக்க கோரி வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அதை அனைத்து மாநில காவல்துறையும் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான முறையில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகக் கூறி குஜராத், கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பிற மாநில போலீசாரின் உத்தரவின்படி தங்கள் வங்கிக் கணக்கை முடக்கியதை எதிர்த்து சென்னை கோபாலபுரத்தில் இயங்கி வரும் சிகேபிஎஸ் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் அஜீத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்கும் முன்பு பின்பற்ற வேண்டிய விதிகள் எதுவும் இல்லை. எந்த வழக்கிற்காக வங்கி கணக்குகளை முடக்கினார்கள். எந்த மாநிலத்தில் உள்ள கணக்குகளை முடக்கினார்கள் என்று தெரிவிக்கவில்லை. இதனால் தங்கள் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்குவது தொடர்பாக விதிகளை வகுத்து அதை நாடு முழுவதும் உள்ள காவல்துறையினர் பின்பற்றுமாறு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், வங்கிக் கணக்கு முடக்கம் செய்வதற்கு முன்பு நோட்டீஸ் கொடுத்து எதற்காக முடக்க போகிறோம், எந்த வழக்கில் முடக்கப் போகிறோம் என்று தகவல் தெரிவித்த பிறகு தான் முடக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதுவும் இல்லை. எனவே, வங்கி கணக்குகளை முடக்குவது தொடர்பான விதிமுறையை வகுக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் சைபர் க்ரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post சைபர் குற்றங்களில் வங்கி கணக்கை முடக்கும் முன் விதிமுறை வகுக்க கோரி வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Home Ministry ,CHENNAI ,Madras High Court ,Union Ministry of Home Affairs ,Dinakaran ,
× RELATED ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின்...