10 டேங்கர் லாரியில் சப்ளை.! வந்தது நெய்யே இல்லை: தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பி நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலந்து அனுப்பி திண்டுக்கல் தனியார் நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் வைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அதிகாரி தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் தற்போது புதிய அரசு பதவியேற்ற பின் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னை செயல் அதிகாரியாக நியமிப்பதற்கு முன் என்னை அழைத்து லட்டு, பிரசாதம் தரமில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே பதவியேற்றபின் பிரசாதத்தை தரமானதாக மாற்ற வேண்டும். பக்தர்களுக்கு ஏழுமலையான் கோயில் ஆன்மீக பயணம் மகிழ்ச்சி பயணமாக அமைய வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து நான் பதவியேற்ற பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். அதில் நெய் தரம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் நெய் சப்ளை செய்யும் 5 நிறுவனத்தை அழைத்து தரமில்லாமல் சப்ளை செய்தால் ஒப்பந்தம் ரத்து செய்து பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. இந்த 5 நிறுவனங்களில் ஒரு நிறுவனமான நெய் சப்ளை செய்த தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர். டைரி நிறுவனத்தினர் மட்டும் தொடர்ந்து தரம் குறைந்த நெய்யை அனுப்பியது தெரிய வந்தது. அந்த நிறுவனத்திற்கு கடந்த ஆட்சியில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி தேவஸ்தானத்திற்கு ஒரு கிலோ நெய் ரூ.320க்கு வழங்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

தேவஸ்தானத்தில் சொந்தமான ஆய்வகம் இல்லை. இதனால் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற என்.டி.டி.பி. ஆய்வகத்திற்கு கடந்த ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த 4 டேங்கர் லாரிகளில் இருந்த நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வில் மிகவும் கலப்படம் நிறைந்த நெய் அனுப்பி இருப்பது தெரியவந்தது. இந்த கலப்பட நெய் நெய் போன்று இருக்கும். ஆனால் நெய் இல்லை என்பதும் தெரியவந்தது. 4 டேங்கர் லாரியில் இருந்த நெய்யின் சோதனையில் ஒரே மாதிரியான முடிவு வந்தது. இதனால் அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் பங்கேற்க முடியாத வகையில் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அபராதம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நிபுணர் குழு அமைத்து எவ்வாறு டெண்டர் அழைக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. ஏ.ஆர். டைரி நிறுவனத்தில் இருந்து கலப்படம் செய்யப்பட்ட நெய் மொத்தம் 10 டேங்கர் லாரி வந்தது. இவற்றில் 6 டேங்கர் நெய் பயன்படுத்தப்பட்டது. 4 டேங்கர் லாரி திருப்பி அனுப்பப்பட்டது. இந்த 6 டேங்கர் லாரி நெய் ஏழுமலையான் கோயில் நெய்வேத்திய பிரசாதம், லட்டு தயாரிக்கவும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது மற்ற நான்கு நிறுவனத்துடன் புதியதாக கர்நாடக மாநிலத்தில் இருந்து நந்தினி நெய் ஒரு கிலோ ரூ.478க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பெறப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

The post 10 டேங்கர் லாரியில் சப்ளை.! வந்தது நெய்யே இல்லை: தேவஸ்தான செயல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: