ஓணம் பண்டிகைக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு


பொள்ளாச்சி: ஓணம் பண்டிகைக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் சரிந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் தக்காளி சாகுபடி அதிகமாக செய்தனர். கடந்த ஜூலை மாதம் முதல் பெய்த தென்மேற்கு பருவமழையால், கடந்த மாதம் இறுதியிலிருந்து தக்காளி நல்ல விளைச்சலடைந்தது. தொடர்ந்து பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் தக்காளி அறுவடை தீவிரமாக நடைபெற்றது. மேலும் உடுமலை, குடிமங்கலம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது.

இதனால், தக்காளி விலை சரிந்தது. இந்த மாதம் துவக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு விற்பனையானது. இந்த நிலை சுமார் 2 வாரமாக நீடித்தது. இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் அதிகளவு தக்காளிகளை வாங்கி வந்தனர். மேலும் கடந்த வாரம் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வந்ததால், ஒரு கிலோ தக்காளி ரூ.30 வரை உயர்ந்தது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஓணம் பண்டிகை முடிந்த பிறகு, நேற்று முன்தினம் முதல் மீண்டும் பொள்ளாச்சி மார்கெட்டில் தக்காளி விலை சரிய துவங்கியது.

நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.22க்கு விற்பனையானது. நேற்று, ஒரு கிலோ ரூ.17 முதல் ரூ.20 வரை விலை சரிந்தது. புரட்டாசி மாதத்தில் முகூர்த்த நாட்கள் குறைவு என்பதால், தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

The post ஓணம் பண்டிகைக்கு பிறகு பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran.

Related Stories: