வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சிலருக்கு தூங்கி எழுந்ததும் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. காலையில் பல் துலக்கிய பிறகு, துர்நாற்றம் இருக்காது. இதற்கு காரணம், பித்த தோஷம் அதிகமாக இருப்பதாகும். இரவில் உண்ட உணவை செரிப்பதற்காக, பித்த தோஷத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசான தன்மை, துர்கந்தம், நீர்த்தன்மை ஆகியவற்றை செலுத்தும்போது அதிலுள்ள நெருப்பும் காற்றும் மேல்நோக்கும் தன்மையை இயற்கையாகவே பெற்றிருக்கிறது.

இதனால் வாயினுள் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் வழிகள் என்னவென்று பார்ப்போம். பித்தத்தின் இந்த இயற்கையான மேல் நோக்கிச் செல்லும் குணத்தைக் கீழ் நோக்கி செலுத்தி, மலம் வழியாக வெளியேற்றினால் பித்தம் குறைந்து வாய் துர்நாற்றம் ஏற்படாது.

வாய் துர்நாற்றம் போக்கும் ஆயுர்வேத மருந்துகள்

திரிபலா சூரணத்தில் அடங்கியுள்ள கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணத்தை சுமார் 200 மி.லி. தண்ணீரில் 1 தேக்கரண்டி கலந்து கொதிக்க வைத்து, 100 மி.லி.யாக வற்றச் செய்து வடிகட்டி இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பாக வாயினுள் விட்டுக் கொப்பளித்து, சிறிதளவு உள்ளுக்குள் குடிக்கவும் செய்ய வேண்டும். இதனால் மறுநாள் காலையில் ஏற்படும் மலக்கழிவில் பித்தத் தோஷத்தின் துர்குணச் சீற்றமானது வெளியேறிவிடும்.

உணவு முறைகள்

புளிப்பாகி மேலே பொங்கி வரும் இட்லி, தோசை போன்றவற்றை இரவில் சாப்பிடக் கூடாது. இரவில் வயிற்றினுள் நடக்கும் செரிமானத்தில் இட்லி மாவின் புளிப்புத் தன்மையால் பித்தச் சீற்றம் ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் இரவில் இட்லி தோசையை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதில், கோதுமை, ரவை போன்றவற்றை உப்புமாவாகவோ, சப்பாத்தியாகவோ செய்து சின்ன வெங்காயம் சேர்த்த பச்சைப்பயறு கூட்டு அல்லது சின்ன வெங்காயத்தை தொக்காகவோ செய்து சாப்பிட வேண்டும். வெள்ளை அவலை தண்ணீரில் அலசிய பிறகு உப்புமாவாகக் கிளறி சாப்பிடலாம். கசப்பு, துவர்ப்பு வகை உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பித்தம் கட்டுப்படுவதுடன் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

கடைபிடிக்க வேண்டியவை:

இரவில் உணவு உண்ட பின்னர் சிறிது நேரம் வாக்கிங் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நூறு அடியாவது நடக்க வேண்டும். இரவில் உறங்கும்போது இடது பக்கமாகச் சரிந்து படுப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.ஆயுர்வேதப் பற்பொடிகளால் இரவில் பல் துலக்குவதையும், வெந்நீர் விட்டு வாய் கொப்பளிப்பதையும் செய்து வர வேண்டும். ஆயுர்வேத மருந்தாகிய சங்கபஸ்பம் எனும் மாத்திரையை தினமும் இரவில் படுக்கும் முன்பு 1 மாத்திரையை சாப்பிட்டு வரலாம்.

தொகுப்பு: ஸ்ரீ

The post வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Related Stories: