×

ஆரோக்கியக் கூந்தலுக்கு எளிய வழிகள்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் சருமப் பராமரிப்புக்கு அடுத்தபடியாக கூந்தல் பராமரிப்புக்குத்தான் அதிகம் கவனம் செலுத்துவார்கள். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் இன்றைய காலச்சூழலில் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் முடி உதிர்வு பிரச்னையை பலரும் எதிர்கொள்கிறார்கள். அதிலிருந்து விடுபடவும். முடியை ஆரோக்கியமாக வைத்துக் சில எளிய வழிகளை தெரிந்து கொள்வோம்.

உச்சந்தலையில் மசாஜ்

உச்சந்தலையில் மசாஜ் என்பது முடி பராமரிப்பின் முக்கியமான அம்சம் ஆகும், இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ரோமக்கால்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதற்கும் உதவுவதாகும். இதனால் முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்கும். மசாஜ் செய்வது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் காரணமாக, அதிகப்படியான அழுக்கு மற்றும் எண்ணெயை இழுப்பதன் மூலம் முடி இழைகளை ஆரோக்கியமாக்க உதவுகிறது.

அரிசித் தண்ணீரில் அலசுதல்

முடியின் வலிமை மற்றும் ஊட்டச்சத்துக்காக கூந்தலில் புளித்த அரிசியின் நீரைப் பயன்படுத்துவது சிறந்ததாகும். முடி வளர்ச்சிக்கு உதவும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அரிசி நீரில் நிறைந்திருப்பதால் முடி பராமரிப்புக்கான ஒரு அதிசய மூலப்பொருளாகும். மற்றொரு அம்சம் அரிசி நீரில் இனோசிட்டால் இருப்பது, முடி உடைவதைத் தடுக்கும் கார்போ ஹைட்ரேட் ஆகும்.

அரிசியை ஒரு நாள் முழுக்க தண்ணீரில் ஊறவைத்து புளிக்க வைக்க வேண்டும். பின்னர், ஷாம்பு போட்டு குளித்து முடியை சுத்தமாக்கிவிட்டு மறுநாள் அரிசிநீரை தலையில் தடவி குறைந்தது ெ10-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். பின்னர், வெது வெதுப்பான நீரில் தலைமுடியை அலசிவிடவும்.

நீராவி பிடித்தல்

முகத்துக்கு ஆவி பிடிப்பது போல தலைமுடிக்கு நீராவி பிடிக்க முடியாது. அதனால் கனமான ஒரு டவலை எடுத்து கொதிக்கும் வெந்நீரில் முக்கி பின் நீரை பிழிந்து விட்டால் அந்த டவல் மிதமான வெப்பத்தில் இருக்கும். இந்த டவலை தலைமுடியைச் சுற்றிக் கட்டி 15 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். நீராவி பிடித்த பிறகு முடியை வழக்கம் போல ஷாம்பு போட்டு அலசிக் கொள்ளுங்கள். அடுத்ததாக கட்டாயம் கன்டிஷ்னர் போடவும் மறக்கக் கூடாது. கன்டிஷ்னர் பயன்படுத்துவதால் முடியின் வறட்சி குறையும். மாயஸ்ச்சராகவும் இருக்கும்.

தேநீரில் அலசுதல்

க்ரீன் டீயில் முடியை அலசுதல் என்பது கொரிய முடி பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதிலும், முடி உடைவதைத் தடுப்பதிலும் கேட்டசின்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நன்மையானது டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) எனப்படும் முடி உடைவதற்கு காரணமான ஹார்மோனின் அளவைக் குறைப்பதில் ஈடுபட்டுள்ள கேடசின் இதற்கு காரணமாகும்.

சிறிது க்ரீன் டீயை கொதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு சிறிது நேரம் குளிர வைக்கவும், பிறகு ஷாம்பு போட்டு குளித்து முடியைச் சுத்தப்படுத்திய பிறகு க்ரீன் டீயை தலைமுழுவதும் தடவி அரைமணி நேரம் அப்படியே விட்டுவிடவும். இது பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது. அதுபோன்று, பிளாக் டீ மற்றும் மூலிகைத் தேநீரையும் பயன்படுத்தலாம். தேயிலையின் தண்ணீரைப் மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது, அதில் உள்ள காஃபின் உச்சந்தலையில் ஊடுருவி ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது செயலற்ற மயிர்க்கால்களை எழுப்பி முடி உதிர்வை குறைக்கிறது.

பட்டுத்தலையணை

பட்டுத் துணியால் செய்யப்பட்ட தலையணை உறைகளில் தினமும் தூங்குவது மூலம் முடி உதிர்தல் குறைகிறது. பருத்தி துணியால் செய்யப்பட்ட தலையணை உறையைப் பயன்படுத்துவதால், உராய்வு காரணமாக அதிக முடி உடையும். அது மட்டுமின்றி இது தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை உறிந்துகொள்கிறது. ஆனால், பட்டுத் துணியில் அல்லது பட்டுப் போன்ற மென்மையான தலையணை உறையில் தலைவைத்து தூங்கும்போது முடியின் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.

எண்ணெய் வைத்தல்

தலைமுடிக்கு எண்ணெய் தேய்ப்பதே நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தலைமுடியின் வறட்சியைக் குறைக்கும். முடியின் வளர்ச்சியை தூண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்த பின் சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதன்மூலம் வேர்க்கால்களுக்கு போதிய ஊட்டமளித்து முடியை நன்கு கன்டிஷ்னிங்காக வைத்துக்கொள்ள உதவும். அதனால் தலைக்குக் குளிக்கும் முன் ஹேர்பேக் போல தேங்காய் எண்ணெயோ அல்லது முடி வளர்ச்சிக்கான ஏதாவது ஒரு எண்ணெயை அப்ளை செய்வது அரை மணி நேரம் வைத்திருந்து பின்னர் தலையைச் சீயக்காய் கொண்டு அலசிவிடவும்.

தொகுப்பு: தவநிதி

The post ஆரோக்கியக் கூந்தலுக்கு எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!