அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்

அருமனை: அருமனை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் இறந்ததாக நினைத்து தீயணைப்புத் துறையினர் அவரது உடலை தேடிய நிலையில், வாலிபர் இரவு முழுவதும் ஆற்றின் நடுவே பாறையின் மேல் உறங்கிவிட்டு உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருமனை அருகே மணியன்குழி அஞ்சுகண்டறை சானல்கரையை சேர்ந்த ஏசுராஜன் மகன் சபின் (21). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான ஆதர்ஸ் உள்பட 2 பேருடன் நேற்று முன் தினம் மாலை ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளார். போதையில் இருந்த 3 பேரும் சபினுக்கு சொந்தமான பைக்கில் வண்ணான்பாறை அருகே கோதையாற்றின் கரைப்பகுதிக்கு வந்தனர்.

அப்போது அதீத போதையில் இருந்த சபின் ஆற்றில் இறங்கி குளிக்கலாம் வாருங்கள் என்று தனது நண்பர்களை அழைத்து உள்ளார். நண்பர்கள் 2 பேரும் மறுத்துவிட்டனர். இதனால் சபின் மட்டும் குளிக்க ஆற்றில் இறங்கினார். நண்பர்கள் 2 பேரும் கரையில் இருந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். குளித்துக்கொண்டிருந்த சபின் திடீரென மாயமானார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். ஆனாலும் சபின் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதையடுத்து பதறியபடி ஊருக்கு சென்ற 2 நண்பர்களும் நடந்த விபரத்தை கூறினர். தகவல் அறிந்து சபினுடைய பெற்றோரும் ஓடி வந்தனர். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆற்றங்கரை பகுதிக்கு சென்று சபினை தேடினர்.நீண்ட நேர தேடுதலுக்கு பிறகும் சபினை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் நள்ளிரவு சுமார் 1 மணி ஆகிவிட்டது.

சபின் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம்? என்று நினைத்த பொதுமக்கள் இனி காலையில் தேடலாம் என்றவாறு தேடும் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். தீயணைப்புத்துறையினரும் வரவில்லை. மகன் மாயமானதை நினைத்து கதறிய பெற்றோரும் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்களால் தூங்க முடியவில்லை. விடிய விடிய காத்திருந்தனர். அப்போது திடீரென வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மாயமான மகன் சபின் உயிருடன் நிற்பதை கண்டு மகிழ்ந்தனர். போதை தெளியாத சபின் நடந்தது எதுவும் தெரியாமல் வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டார்.

இந்த விபரம் எதுவும் ஊர் பொதுமக்களுக்கு தெரியாது.நேற்று காலை குலசேகரம் தீயணைப்புத்துறையினரும், கடையாலுமூடு போலீசாரும் கோதையாற்றின் அருகே சென்று சபினை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடமாக சல்லடைபோட்டு தேடினர். சபினின் நண்பர்கள் 2 பேரும் அங்கு வந்தபோது, ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சபினின் பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் போலீசார் சபினின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டு வாசலில் சபினுடைய பைக் நின்றுகொண்டிருந்தது. தொடர்ந்து வீட்டுக்கதவை போலீசார் தட்டிய நிலையில், சபினுடைய பெற்றோர் கதவை திறந்தனர். அவர்கள் சார், எங்கள் மகன் திரும்ப வந்துவிட்டான், இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறான் எனக்கூறினர்.இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், சபினை எழுப்பி நடந்த விபரத்தை கேட்டனர்.

சபின் கூறுகையில், நான் ஆற்றுக்குள் இறங்கி குளித்தபோது போதையில் எனக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டேன். ஆனால் சிறிது சுயநினைவு இருந்ததால் ஆற்றின் நடுவே உள்ள பெரிய பாறையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அதன்மீது ஏறினேன். இருட்டாக இருந்ததால் வழி தெரியவில்லை. எனவே பாறையின் மேல் படுத்து உறங்கிவிட்டேன். அதிகாலை சுமார் 4 மணியளவில் சிறிது வெளிச்சம் வந்ததும், உடனே மீண்டும் ஆற்றுக்குள் இறங்கிச்சென்று கரை திரும்பினேன். பின்னர் எனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன் என்று கூறினார். இதை கேட்டு போலீசாரும், அங்கு வந்த தீயணைப்புத்துறையினரும் நிம்மதி அடைந்தனர்.

உயிரோடுதான் இருக்கேன்
சபினுடைய வீட்டுக்குள் சென்ற போலீசார், உன்னை தேடி நாயாக அலைகிறோம். நீ இங்கு வந்து ஜாலியாக படுத்து உறங்குகிறாயா? எனக்கூறி சபினை எழுப்பினர். பின்னர் நடந்த விபரத்தை கூறியதோடு, உன் உடலை தீயணைப்பு துறையினர் கோதையாற்றின் அருகே தேடிக்கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினர். இதைக்கேட்டு குழப்பமடைந்த சபின், ஐயோ… நான் சாகவில்லை. உயிரோடு இருக்கிறேன்… என சத்தமிட்டபடியே கோதையாற்றின் கரைக்கு ஓடிச்சென்றார்.

The post அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர் appeared first on Dinakaran.

Related Stories: