மண்டபம் கேம்ப் பகுதியில் முள்புதர்கள் மண்டிய மின்வாரிய அலுவலகம்

மண்டபம்: மண்டபம் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் மரம், செடிகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் அருகே தமிழர்கள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ள கேம்ப் பகுதி அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் மின்வாரிய அலுவலகம்,பணம் கட்டும் அலுவலகம் மற்றும் பணியாளர் குடியிருப்பு சேர்ந்து ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்திற்கு மண்டபம் கேம்ப் பேரூராட்சி மரைக்காயர் பட்டிணம் வேதாளை சாத்தக்கோன்வலசை ஊராட்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மின்சாரத்துக்கான கட்டணம் செலுத்தவும், மின்சார வாரியம் குறித்து ஏதேனும் குறைகள் தெரிவிக்கவும் இந்த அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அதுபோல இந்த அலுவலகத்திற்கு அருகே தமிழர்கள் மறுவாழ்வு மையம் வளாகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியிலும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஆதலால் இந்த பகுதி எந்த நேரமும் பொதுமக்கள் பயன்பாடான பகுதியாகும். இந்நிலையில் மின்வாரிய அலுவலகத்தை சுற்றி முழுவதும் முள்புதர்களும்,கருவேல மரங்களும் அடர்ந்து உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் பாம்புகள் அடிக்கடி நடமாட்டங்கள் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு வருகிறது. ஆதலால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மின்வாரிய அலுவலகத்தில் வளர்ந்துள்ள முள்புதர்கள், கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண்டபம் கேம்ப் பகுதியில் முள்புதர்கள் மண்டிய மின்வாரிய அலுவலகம் appeared first on Dinakaran.

Related Stories: