மாமல்லபுரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மாமல்லபுரம், செப்.19: மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்களை உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இந்த, புரதான சின்னங்களை சுற்றி பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் தினமும் சொகுசு பஸ் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சுற்றி பார்த்து புராதன சின்னங்கள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். குறிப்பாக, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வருபவர்கள் ஏராளமானோர் இசிஆர் சாலை வழியாக மாமல்லபுரம் நுழைவு வாயில் வந்து, அங்கிருந்து கோவளம் சாலை வழியாக நகருக்கு உள்ளே வருகின்றனர். குறிப்பாக, கோவளம் சாலை, கிழக்கு ராஜ வீதி, கடற்கரை செல்லும் சாலை, கலங்கரை விளக்க சாலை, ஐந்து ரதம் சாலை, மேற்கு ராஜ வீதி ஆகிய இடங்களில் சாலையை மறித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தினமும் அவதியடைந்து வந்தனர்.

இது குறித்து, கடந்த 20ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா வருவாய்த்துறை, பேரூராட்சி நிர்வாகம், சட்டம் ஒழுங்கு காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் நேரில் வந்து கோவளம் சாலை, கிழக்கு ராஜ வீதி, கடற்கரை செல்லும் சாலை, பழைய சிறபக் கல்லூரி சாலை, கலங்கரை விளக்க சாலை, ஐந்து ரதம் சாலை, மேற்கு ராஜவீதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து, ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், டிராபிக் இன்ஸ்பெக்டர் செல்வம், சட்டம் ஒழுங்கு எஸ்ஐ திருநாவுக்கரசு, துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் இசிஆர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெட்டி கடைகள், கோவளம் சாலையில் ஓட்டல் ஆக்கிரமிப்பு, பிரியாணி கடைகள், பெட்டி கடைகள், தள்ளுவண்டி கடைகள், பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டது.
அசம்பாவிதம், ஏற்படாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வரும், 25ம் தேதி வரை மாமல்லபுரம் முழுவதும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மாமல்லபுரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: