போலி கால் சென்டர் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுச்சேரி, செப். 19: போலி கால் சென்டர் மோசடி வழக்கில் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த கோகிலா (38) என்பவரிடம் ஆன்லைனில் டிரேடிங் செய்ய மர்ம நபர் தொடர்பு கொண்ட நிலையில், அவரை நம்பி கோகிலா ரூ.18 லட்சம் முதலீடு செய்தார். ஆனால் அவர் டிரேடிங் செய்த பணம், முதலீடு செய்த பணம் ஆகியவை எதுவும் வராததால் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் இந்த ஆன்லைன் கும்பல் பெங்களூரு, நாமக்கல், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் போலி கால் சென்டர்கள் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றியது தெரியவந்தது. பிறகு போலீசார் நெய்வேலியில் ஆய்வு செய்து ரூ.3 கோடி மதிப்பிலான கார்கள், கம்ப்யூட்டர்கள், வங்கி காசோலைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த பிரவீன் (31), நெய்வேலி ஜெகதீஷ் (36), பெங்களூரு முகமது அன்சர் (38), நெய்வேலி தவுபில் அகமது (36), ராமச்சந்திரன் (32), பிரேம் ஆனந்த் (36), விமல்ராஜ் (34) உள்பட 7 பேரை கைது செய்தனர்.

மேலும் துபாயில் பதுங்கியுள்ள இந்த மோசடிகளுக்கு மூளையாக செயல்பட்ட நெய்வேலியை சேர்ந்த நவ்ஷத்கான் அகமது உள்பட 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த மகாதேவன் (30) என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இவ்வழக்கில் நேற்று கைது செய்தனர். அப்போது மகாதேவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இப்ராஹிம் டப்பின், நவ்ஷத் கான் அகமது ஆகியோர் உத்தரவின்படி, நிறுவனத்தில் பணிபுரியும் 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டீம் லீடராக பணிபுரிந்து, மாதந்தோறும் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணமோசடி டார்க்கெட் வைத்து செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இப்ராஹிம் டப்பின், நவ்ஷத்கான் அகமது மட்டுமின்றி இவர்களுடைய மனைவிகளுக்கும் இந்த இணைய வழி மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

The post போலி கால் சென்டர் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: