60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்

தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் 60 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்தது. மற்ற பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 2025ம் ஆண்டு துவக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தென்காசியில் பழமையும் பெருமையும் வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் கிபி 1445ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். வடக்கே கங்கை நதிக்கரையில் அமைந்த காசி விஸ்வநாதரை போன்று தெற்கே சிற்றாற்றின் கரை பகுதியில் மன்னர் பராக்கிரம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாறு. 1445ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1446ல் சுவாமி மற்றும் அம்மன் உருவச்சிலைகள் அமைக்கப்பட்டன.

கோயில் கிழக்கு மேற்காக 554 அடி நீளமும், தெற்கு வடக்காக 318 அடி அகலமும் கொண்டது. கிபி 1524ல் திருவாங்கூரைச் சேர்ந்த ஜெயதுங்க நாட்டு மன்னர் சங்கரநாராயண பூதல வீரமார்த்தாண்ட ராமவர்மன் என்ற சிறைவாய் மூத்தவரால் இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிரம கலசாபிசேகம் நடத்தப்பட்டது. இக்கோயிலின் ராஜகோபுரம் பிரசித்தி பெற்றது. கிபி 1456ல் பரக்கிரம பாண்டிய மன்னரால் கட்ட ஆரம்பிக்கபட்டது. அவர் காலமான பின் அவரது தம்பி குலசேகர பாண்டியரால் 1462ல் முற்றுவிக்கப்பட்டது. அப்போது 175 அடி உயரத்துடன் 9 நிலையுடனும், வடக்கு – தெற்காக 110 அடி நீளத்திலும், கிழக்கு – மேற்காக 84 அடி அகலத்திலும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.

கிபி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜகோபுரம் மொட்டையாய், இருகூறாக பொலிவிழந்து நின்றது. 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் ராஜகோபுர திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு 1990ல் 180 அடி உயரத்தில் 9 நிலைகளுடன் மிகப்பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ராஜகோபுரத்தின் சிறப்பு கோபுரத்தினுள் நுழையும் போது கோவிலுக்குள்ளிருந்தும் பாதி பகுதி நுழைந்தபின் நம் முதுகுக்குப் பின்னிருந்தும் (கோவிலுக்கு வெளியிலிருந்தும்) தென்றல் காற்று வீசும். இது போன்ற சிறப்பு வேறெந்த கோவிலிலும் கிடையாது. ராஜகோபுரம் கட்டப்பட்ட பின் 1990ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டாவதாக 2006ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது‌.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தற்போது 18ஆண்டுகள் கடந்த நிலையில் இக்கோயிலிலும் திருப்பணிகள் மேற்ெகாண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழகம் அரசு தென்காசி கோயிலிலும் ரூ.3 கோடிக்கு மேல் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து இரண்டு கட்டமாக பாலாலயம் செய்யப்பட்டது. முதலில் ராஜகோபுர திருப்பணிக்காக கார்த்திகை மாதமும், விமானங்கள் திருப்பணிக்காக பங்குனி மாதமும் பாலாலயம் செய்யப்பட்டது. ராஜகோபுரம் திருப்பணிகளை பொருத்தவரை அதிக அழுத்தத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தல், பழுதுகள், பூச்சுகள், ராஜகோபுரத்தில் பழுதடைந்த சிற்பங்களை சீரமைத்தல், தொடர்ந்து வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக உயரமாக ராட்சத சாரங்கள் அமைத்து பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் உள்பகுதியில் சகஸ்ரலிங்கம், பராசக்தி பீடம், சொக்கநாதர் மீனாட்சி சன்னதி, காலபைரவர் சன்னதி, உலகம்மன் சன்னதி, முருகன் சன்னதி, சுவாமி சன்னதி ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகிறது. சன்னதிகளில் உள்ள விமானங்கள், கோயிலின் மேற்கூரை தளஓடுகள் மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக அனுமதி கிடைத்தவுடன் தேவையற்ற மரங்களை அகற்றி பக்தர்கள் சுற்றி வரும் வகையில் வெளிப்பிரகாரம் முழுவதும் கருங்கல் பதிக்கப்பட உள்ளது. மேலும் மின்சாதன பொருட்கள் சீரமைப்பு, பிளம்பிங் பணிகள் உள்ளிட்டவை எஞ்சியுள்ளது.

சுவாமி, அம்பாள் சந்நிதியில் உள்ள பழைய கொடிமரங்கள் அகற்றப்பட்டு இரு கொடிமரமும் ரூ.10 லட்சம் செலவில் உபயதாரர்கள் அழகர்ராஜா, ராஜேஷ் ராஜா குடும்பத்தினர் சார்பில் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தயாரிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் இன்னமும் 3மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் திருப்பணிகள் நிறைவு பெற்று 2025ம் ஆண்டு துவக்கத்தில் கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தென் காசி எனப்போற்றப்படும் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

The post 60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: