‘எமர்ஜென்சி’ திரைப்பட விவகாரம்: நடிகை கங்கனா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு


சண்டிகர்: ‘எமர்ஜென்சி’ திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகை கங்கனா கோர்ட்டில் ஆஜராக சண்டிகர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதி எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு ‘எமர்ஜென்சி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் தயாரித்த இந்த படத்தில், நடிகர்கள் அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, விஷக் நாயர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் இந்த திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு சர்ச்சைகளால் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சென்சார் போர்டு), ‘எமர்ஜென்சி’ படத்திற்கு சான்றிதழ் வழங்குவதிலும் இழுபறி நீடித்தது. இந்நிலையில் சண்டிகர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ‘சீக்கிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், ‘எமர்ஜென்சி’ படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதத்தின் பெயரால் இரு சமூகத்தினரிடையே பகைமையை பரப்பும் வகையில் திரைப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் உள்ளன. அதனால் செக்டார்-36 காவல் நிலையத்தில், இவ்விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. வழக்கு ஏதும் பதியவில்லை. எனவே நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வரும் டிசம்பர் 5ம் தேதி நீதிமன்றத்தில் கங்கனா உள்ளிட்டோர் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ‘எமர்ஜென்சி’ திரைப்பட விவகாரம்: நடிகை கங்கனா கோர்ட்டில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: