ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி முன்னாள் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட 11 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ல் சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக டெண்டர் ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் ஊழல் வழக்கில் 2019-ல் முதல்கட்ட விசாரணை தொடங்கியது. அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

எஸ்.பி.வேலுமணியின் முறைகேடுகளுக்கு உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலுமணி அமைச்சராக இருந்தபோது அதிமுக நிர்வாகி சந்திரசேகர் என்பவரே டெண்டர்களை முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கே.சி.பி. என்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வரும் சந்திரசேகர், வேலுமணி இல்லத்தில் இருந்து டெண்டர்களை ஒதுக்கியதாக புகார் எழுந்தது. கோவை அதிமுக நிர்வாகியாக இருந்த சந்திரசேகரை டெண்டர்களை ஒதுக்க வேலுமணி அனுமதித்தது விதிமீறல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: