அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வாரத்தில் முதல்வர் இல்லத்தை விட்டு வெளியேறுவார்: ஆம் ஆத்மி அறிவிப்பு

டெல்லி: முதல்வர் பதவியில் இருந்து விலகி உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வருக்கான இல்லத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். தமது நேர்மையை நிரூபிக்கும் வகையில் மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டால் தான் முதலமைச்சர் பதவியை ஏற்பேன் எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், நவம்பர் மாதம் நடைபெறும் மராட்டிய தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற்றது. இதில் தற்போது அமைச்சராக இருக்கும் அதிஷி-யை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வாரத்தில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என்று ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறுகையில்;

டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் நேர்மையான சான்றிதழை வழங்குவார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் டெல்லி மக்களுக்கு முழு நேர்மையுடன் சேவை செய்துள்ளார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால் முதலமைச்சருக்கு கிடைக்கும் பாதுகாப்பு, அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஒரு வாரத்தில் விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அவரது பாதுகாப்பு குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. அவர் ஒருமுறை அல்ல, பலமுறை தாக்கப்பட்டார், அவருடைய பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்பதை அவரிடம் சொல்லி விளக்க முயற்சித்தோம். ஆனால் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று முடிவு செய்துள்ளார். அதன்பின்னர் கெஜ்ரிவால் எங்கு வசிக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அவர் கூறினார்.

The post அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வாரத்தில் முதல்வர் இல்லத்தை விட்டு வெளியேறுவார்: ஆம் ஆத்மி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: