திருவாடானை அருகே பெண்ணை வீட்டில் அடைத்து ஐந்து பேர் கூட்டு பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேரிடம் விசாரணை

திருவாடானை: திருவாடானை அருகே இளம்பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத வாலிபரும் செல்போன் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

மேலும் அந்த வாலிபர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம் பெண்ணை அழைத்து கொண்டு திருவாடானை அருகே ராமநாதபுரம் – சிவகங்கை மாவட்ட எல்லைப்பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உதவியுடன், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் தங்கினர். அப்போது இளம்பெண்ணை பலமுறை வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அந்த வாலிபர் மற்றும் அவரது சக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவும் எடுத்துள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணிடம் இருந்த சுமார் 5 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்ததோடு, அந்த இளம்பெண்ணை 5 வாலிபர்களும் சேர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியைக் காணவில்லை என அவரது போட்டோவுடன் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவரது மனைவியை அப்பகுதி வாலிபர்கள் சிலர், வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதை அறிந்து கொண்டார்.

5 வாலிபர்களிடம் இருந்து தனது மனைவியை மீட்டு தரக்கோரி அவரது கணவர், திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்ததோடு பெண்ணின் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவாடானை அருகே பெண்ணை வீட்டில் அடைத்து ஐந்து பேர் கூட்டு பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: