‘2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’; ஒன்றிய அமைச்சராக இருப்பவருக்கு அடக்கம், பண்பு வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி


ஈரோடு: ‘2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’ என ஈரோட்டில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார். தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பெரியார் நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தபடி, சமூகநீதி உறுதிமொழி ஏற்பு எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெரியாரின் புகழ் உலகெங்கும் பரப்பப்பட்டு வருகிறது. பெரியாரின் புகழை பரப்புவதில் முதல்வர் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

சுய மரியாதை, திராவிடமாடல் என்ன என்பதை இந்தியா முழுவதும் புரிந்துகொள்ளும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். ஒன்றிய அமைச்சராக இருப்பவர்களுக்கு அடக்கம், பண்பு வேண்டும். கோவையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டம் குறைகளை கேட்பதற்காக கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தனது குறைகளை கூறினார். அதிலும், ஜிஎஸ்டி நீக்க வேண்டும் என்று பேசவில்லை. அதில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பது பற்றி மட்டும் கூறினார். ஆனால் இரவில், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். அப்போது அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது கேவலமான செயலாகும்.

மனிதர்களை, மனிதர்களாக கருதும் பண்பு நிர்மலா சீதாராமனிடம் இல்லை. தமிழகத்தில், மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். இது கட்சி கருத்தல்ல. அதே நேரத்தில் கள்ளுக்கடைகளை திறந்தால் பனை, தென்னை விவசாயிகள் பயன் பெறுவார்கள். தற்போது கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே, கொடிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சொல்லும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கி நடத்தி வரும் திருமாவளவன், ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. சீமான் போன்றோர் தமிழ்நாடு உள்பட கேரளாவையும் உள்ளடக்கிய ஆட்சியை பிடிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை. மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து மதவெறிக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்ததுபோல வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். தமிழக முதல்வரின் 18 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு பல்வேறு நிறுவனங்களை முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. குறிப்பாக போர்டு கார் தொழிற்சாலை ஏற்கனவே இங்கு தொழிலை நடத்திவிட்டு மூடிவிட்டு சென்று விட்டனர்.

தற்போது மீண்டும் இங்கு வந்திருப்பது முதல்வரின் சாதனை ஆகும். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் முதல்வரின் வெளிநாடு பயணத்தை சிலர் கொச்சைப்படுத்தி வருகின்றனர். எச்.ராஜா கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெறாதவர். அவரை பொறுத்தவரை காலாவதியான ராஜா. இவ்வாறு ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.

The post ‘2026ல் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை’; ஒன்றிய அமைச்சராக இருப்பவருக்கு அடக்கம், பண்பு வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: