×

தேரழுந்தூர் தேவாதிராஜன்

‘தன் குஞ்சுகளுக்கு இரை தேடி, தம் துணையுடன் பறந்து வருகின்றன பறவைகள். நீர் சூழ்ந்த கழனிகளில் அவை அவ்வாறு தேடி வரும்போது, அந்தக் கழனியிலுள்ள மீன்கள் எங்கே தாம் அந்தப் பறவைகளால் பிடிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்தபடி துள்ளித் துள்ளி குதிக்கும் வளம் மிகுந்த வயல்கள் சூழ்ந்த திருத்தலம் அழுந்தூர். இத்தகைய இயற்கை செழுமை பூண்ட தலத்தில் நின்றிருக்கும் எம்பெருமான், தன் உள்ளத்தையும் கண்களையும் எப்போதும் நிறைவித்திருக்கும் நாயகன்தானோ’ என்று நெகிழ்ந்து மகிழ்கிறார் திருமங்கையாழ்வார்.

வெள்ளத்துள் ஓராலிலை மேல்மேவி
அடியேன் மனம் புகுந்தென்
உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும்
நின்றார் நின்ற ஊர் போலும்
புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி
போனகாதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே
– என்பது அவரது பாசுரம்.

வெளிப் பிராகாரத்தில் ‘திருமங்கை மன்னன் மண்டப’த்தில் திருமங்கையாழ்வாரின் சந்நதி அமைந்துள்ளது, பொதுவாக அனைவருக்குமே வியப்பைத் தரும். கோயிலுக்குள்ளே தனி சந்நதியில் ஆரோகணித்திருக்க வேண்டிய இவர் ஏன் வெளியே வந்தார்?

ஒவ்வொரு தலமாகச் சென்று பெருமாளை தரிசித்து மங்களாசாசனம் செய்து வந்த ஆழ்வார், இந்த அழுந்தூர் கோயிலுக்கு வந்தபோது சற்றுத் தயங்கினார். வெளியிலேயே நின்றுகொண்டார். இது பெருமாள் கோயில்தானா என்று அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. மூலவர் பெயர் தேவாதிராஜன் என்று கேள்விப்பட்ட அவர், அது தேவர்களுக்கெல்லாம் ராஜனான இந்திரனின் இன்னொரு பெயராக இருக்கலாமோ என்று யோசித்தார். திருமால் தலங்கள் தவிர பிறிதொன்றில் ஆர்வம் கொள்ளாதிருந்த திருமங்கையாழ்வார் சற்றே ஏமாற்றம் கொண்டார். கோயிலுக்குள் போவதா, வேண்டாமா என்ற தவிப்பு. தம் கொள்கையிலிருந்து நழுவுவதில் அவருக்கு உடன்பாடில்லை. முற்றிலும் மாதவனை சரணடைந்துவிட்டவர்களுக்கு இந்தத் தடுமாற்றமும், மயக்கமும் வரலாகாதே என்றும் அவர் சந்தேகித்தார்.

தன் மனம் ஏன் இப்படி அலைபாய்கிறது?
பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக அந்தத் தலத்தை விட்டுப் புறப்பட்டார். நாலடி தூரம்கூட நடந்திருக்கமாட்டார், பளிச்சென்று உடலில் ஏனோ தளர்வு ஏற்பட்டது. அடுத்த அடி எடுத்து வைக்க முடியாதபடி பலவீனம். அதுவரை உற்சாகமாக, ஆரோக்கியமாக இருந்த தனக்கு திடீரென்று என்ன வந்தது? மெல்லத் திரும்பிக் கோயிலைப் பார்த்தவர் அப்படியே பரவசமானார். ஆமாம், உள்ளிருந்து பெருமாள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘நான்தான், இங்கிருப்பது உன் உள்ளத்தைக் கவர்ந்தவனான நான்தான். மயங்காதே, உள்ளே வா,’ என்று அவர் அழைப்பது போலிருந்தது. அதே கணத்தில் அவருடைய சோர்வு முற்றிலும் நீங்கியது. புதுத் தெம்பு ஊறியது. உடனே உள்ளே ஓடோடிச் சென்று பரந்தாமனைக் கண்களால் ஆறத் தழுவினார். பாதம் பணிந்து நெக்குருகினார். இந்தத் தலத்தைப் புறக்கணித்து, வேறொரு தலம் செல்ல நினைத்தத் தன் கால்களுக்கு விலங்கிட்டுத் தடுத்த இந்த இறைவன் தன் தந்தையாரான வசுதேவரின் கால்களில் கம்சன் இட்ட விலங்கை அறுத்தெறிந்த கிருஷ்ணனாக அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்ற தெளிவுக்கு வந்தார் ஆழ்வார். உடனே மடை திறந்த வெள்ளம்போலப் பாசுரங்கள் பொங்கிப் பெருகின. ஆமாம், மொத்தம் 45 பாசுரங்களால் இந்த தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்தார் திருமங்கையாழ்வார்.

தான் ஆட்கொண்ட ஆழ்வாருக்கு இன்றைக்கும்கூட பிரத்யேக முக்கியத்துவம் தந்து சிறப்பிக்கிறார் இந்தப் பெருமாள் என்பதைக் காணும்போது நெஞ்சு விம்முகிறது. தினமும் ஆழ்வாருக்கு அமுதூட்டி அகமகிழ்கிறார் தேவாதிராஜப் பெருமாள். ஆமாம், ஒவ்வொரு நாளும், காலை, மாலை இரு வேளைகளிலும், தனக்கு அமுது நிவேதிக்கப்பட்ட பிறகு, அந்த அமுதினை ஆழ்வாருக்கும் அர்ப்பணிக்குமாறு பணிக்கிறார் பெருமாள். அதன்படி, அந்த பிரசாதத்தை, கோயிலின் அனைத்து மரியாதைகளுடன் அவரது சந்நதிக்கு அனுப்பி வைக்கிறார். எத்தகைய கருணை மிக்கப் பேரருளாளன்!

இது மட்டுமல்ல, தேவாதிராஜன், உற்சவர் ஆமருவியப்பனாக திருவீதிப் புறப்பாடு போகிறார் என்றால், தன் சந்நதியை விட்டு வெளியே வரும் அவர் முதலில் நிற்பது திருமங்கையாழ்வார் சந்நதிக்கு முன் பாகத்தான். குடை, சாமரம், தீவட்டி, மங்கள வாத்தியங்கள் என்று எல்லா மரியாதைகளுடன், ஆழ்வாருக்கே முதலில் சடாரி ஆசி அருளி திவ்யமாய் தரிசனம் தருவார். அதற்குப் பிறகே திருவீதி உலா ஆரம்பிக்கும்! சம்பிரதாயப்படி கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடு தொடங்கும்போதே அடியவர்கள் பிரபந்தங்களைப் பாடுவார்கள். ஆனால் இந்தக் கோயிலில் மட்டும், ஆமருவியப்பன் ஆழ்வாருக்குத் தன் முதல் தரிசனம் அருளிய பிறகு, இவர் சந்நதியிலிருந்துதான் பாட ஆரம்பிப்பார்கள்!  இன்னொன்றும் உண்டு. இங்கே திருமங்கையாழ்வாருக்கு திருக்கார்த்திகைப் பெருவிழா வெகு சிறப்பாக நடக்கும். வைபவத்தின் பத்தாம் நாளன்று ஆமருவியப்பன் புறப்பட்டு, ஆழ்வார் சந்நதிக்கு வந்து தங்குவார். இங்கேயே மண்டகப்படி கண்டு ஆழ்வாருக்கு ஆசி வழங்குகிறார் என்றால், பெருமாள் தன் நெஞ்சில் மஹாலட்சுமிக்கு இணையாக ஆழ்வாரையும் அமர்த்திப் பேரருள் புரிகிறாரே என்ற வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது.

ஆமருவியப்பன் என்று பெருமாள் அழைக்கப்படக் காரணம் என்ன? வடமொழியில் ‘கோசகன்’ என்று போற்றப்படுகிறார் இவர். அதாவது பசுக்களின் சிநேகிதன். அதுவே தமிழில் ஆநிரைகளின் பாதுகாவலனாகப் பொருள்பட்டது.
ஊருக்கு இந்தப் பெயர் எப்படி அமைந்தது? தேர் அழுந்திய ஊர்தான் தேரழுந்தூர் என்றானது. வடமொழியில் ரதமக்ன புரம். தேர் அழுந்துவானேன்? உபரிசரவசு என்ற மன்னன்தான் காரணம். ஒருமுறை தேவர்களுக்கும், முனிவர்களுக்குமிடையே ஒரு பொருள் குறித்து விவாதம் எழுந்தது. ஏற்கெனவே தன் தவ வலிமையால், வானில் தன் தேரில் பறக்கும் ஆற்றலைப் பெற்றிருந்த உபரிசரவசுவிடம் நடுநிலை அபிப்ராயம் கேட்க அவர்கள் போனார்கள். தேரோடு வானில் பறக்கக்கூடிய வரத்தைப் பெற்றிருந்த அவன், தேவர்களுக்கு சாதகமாகக் கருத்து சொன்னான். உடனே முனிவர்கள் பெருங்கோபம் கொண்டு சபிக்க, தொடர்ந்து பறக்க இயலாதபடி அவனுடைய தேர் இந்தத் தலத்திலுள்ள குளத்தில் விழுந்து அழுந்தி நின்றது. இதனால் தேர் அழுந்தூர்.

இதே உபரிசரவசுவை வைத்து இன்னொரு வகையாகவும் காரணம் சொல்லப்படுகிறது. கிருஷ்ணாரண்யம் என்றழைக்கப்படும் இந்தத் தலத்தில் பரந்தாமன் பசுக்களையும், கன்றுகளையும் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது விண்ணில் பறந்துகொண்டிருந்த உபரிசரவசு, அவரைப் பார்த்தும் அலட்சியமாகத் தொடர்ந்து பறக்க முனைந்தான். அதை உணர்ந்த பரமன், கீழே விழுந்த தேரின் நிழலைத் தன் வலதுகால் பெருவிரலால் பற்றி இழுத்து, திருக்குளத்தில் அந்தத் தேர் விழுந்து அழுந்துமாறு செய்தார்.

தன் தவறு உணர்ந்து வருந்திய அரசன், அங்கே தவம் இயற்றிக்கொண்டிருந்த அகஸ்தியரின் அறிவுரைப்படி எம்பெருமானை வழிபட்டு மன்னிக்க வேண்டினான். அப்போதும் அவனிடம் கொஞ்சம் ஆணவம் ஒட்டிக்கொண்டிருந்ததை அறிந்த பெருமாள், அவனிடம் தனக்கு ஆயிரம் குடங்கள் வெண்ணெய் சம்ர்ப்பிக்குமாறு ஆணையிட்டார். உடனே அந்த முயற்சியில் இறங்கிய உபரிசரவசுவால் 999 குடங்களில் மட்டுமே வெண்ணெய் நிரப்ப முடிந்தது. எவ்வளவு பிரயத்தனப்பட்டும் ஒரு குடம் காலியாகவே இருந்தது. உடனே ஏமாற்று எண்ணம் தோன்றியது அவனுக்கு. ஒன்றுதானே, சேர்த்து வைத்துவிட்டால் தெரியவா போகிறது என்று குதர்க்கமாக நினைத்தான்; அப்படியே செய்தான். ஆனால் ‘கிருஷ்ண’னுக்கு இந்தக் கள்ளத்தனம் தெரியாதா என்ன? அவன் சமர்ப்பித்த ஆயிரம் குடங்களும் காலியாகுமாறு செய்தார். திகைத்துப் போனான் உபரிசரவசு. அந்தக் கணமே அவனுடைய ஆணவம் ஒழிந்தது; ஏமாற்று குணமும் மறைந்தது. பெருமாளையே முழு சரணாகதியடைந்தான். அவனுடைய ஆணவமென்னும் தேர் அழுந்தி, அழிந்த ஊர் என்றும் கொள்ளலாம்.

உற்சவர் தரிசனம் உற்சாகம் கொள்ள வைக்கிறது. ஸ்ரீதேவியும், பூதேவியும் இருபுறங்களிலும் இருக்க, கூடவே ஒரு பசுவும், ஒரு கன்றும் அவரைச் செல்லமாக உரசியபடி நின்றிருக்கின்றன. தேவாதிராஜனுடன் இந்த ஆநிரைகள் எப்படி சேர்ந்தன? இதற்கு ஸ்ரீமத் பாகவதம் ஒரு சம்பவத்தைக் கூறுகிறது. கிருஷ்ணனை மட்டும் தனித்து தரிசித்து மகிழ விரும்பினான் பிரம்மன். அதற்கு எப்போதும் அவனைச் சூழ்ந்திருந்த ஆவினங்கள் தடையாக இருந்தன. உடனே அந்த அன்பு இனங்களை அங்கிருந்து அகற்றி, இந்தத் தலத்தில் ஒளித்து வைத்தான். பிறகு தனித்திருக்கும் மாயக் கண்ணனை கண்குளிரக் கண்டான். ஆனால் மாதவனுக்கு மாக்களின் பிரிவும் அவற்றின் வேதனையும் தெரியாதா என்ன? ‘ஆதிமூலமே’ என்றழைத்த கஜேந்திரனைக் காக்க கருடவாகனராக பறந்தோடி வந்த பரமன் அல்லவா அவன்? அவனுக்கு இந்தப் பசுக்களின் தீனமான குரல் காதில் விழாமலா இருக்கும்? உடனே இந்தத் தலத்துக்கு விரைந்துவந்து அவற்றோடு இணைந்து, அவற்றை மகிழ்வித்தான். அந்த சம்பவத்தின் சாட்சிதான் இந்த உற்சவர் விக்ரகம்.

ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், செங்கமலவல்லித் தாயார் (அஷ்டலட்சுமி மண்டபத்தினுள்), ஆண்டாள், ராமர், நரசிம்மர், விஷ்வக்சேனர், ஹயக்ரீவர்-தேசிகன் என்று பல சந்நதிகளைக் கொண்ட கோயில் இது. கோசாலை ஒன்று இருப்பதும் மிகப் பொருத்தமானது.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த திருத்தலம் இது. கம்பன் மேடு என்றழைக்கப்படும் பகுதியில் அவர் வாழ்ந்திருக்கிறார். இங்கே கம்பன் மண்டபம் ஒன்று அழகுற அமைந்திருக்கிறது. அதனுள் மிக கம்பீரமாக, ராமாயணச் சுவடிகளைப் பெருமையுடன் தாங்கியபடி கம்பர் நின்றிருக்கிறார். இது தவிர, கோயிலினுள், இடது பக்கத்தில் சிறு அளவில் கம்பர், தம் மனைவியாருடன் ஒரு அகன்ற மாடத்தில் காட்சியளிக்கிறார். இரண்டு ஜோடிகளாக இவர்களைக் காணமுடிகிறது. இடது பக்கத்து ஜோடி புராண காலத்தது என்றும், வலது பக்கத்து ஜோடி சமீப காலத்தது என்றும் சொல்கிறார்கள். இது கம்பர் பிறந்த ஊர் என்பதால், பல்வேறு இடங்களிலும் கம்பருக்கான சிலைகள் இருந்திருக்கலாமென்றும், அவற்றில் இரு ஜோடிகளை மட்டும் இங்கே கொண்டுவந்து ஸ்தாபித்திருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

மூலவர் சந்நதியில் மார்க்கண்டேயன் பெருமாளை வணங்கியபடி, அவருக்கு வலது பக்கத்தில் காட்சியளிக்கிறார். யமனிடமிருந்து தன்னை சிவபெருமான் மீட்டார் என்றாலும், இந்தத் தலத்துப் பெருமாள்தான் அவருக்கு மோட்சகதி கிட்டச் செய்தார் என்பதை, இப்படி தான் கருவறையிலேயே அமர்ந்து பெருமாளை சேவிப் பதன் மூலம் தெரிவிக்கிறார்.

காவிரித் தாயும், இதே கருவறையில் அமர்ந்தபடி பெருமாளை வணங்குகிறாள். காவிரியைத் தன் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்த அகத்தியர், அது ஒரு காகத்தால் தட்டிவிடப்பட, நானிலமெங்கும் பரவிப் பரந்தாள் காவிரி. அதுகண்டு கோபமுற்ற முனிவர், காவிரியால் வளம் பெற்றோர் அனைவரும் துன்புறுவர், வறுமையுறுவர் என்று சபித்துவிட்டார். இதனால் பெரிதும் வருத்தமுற்ற காவிரி, இந்தத் தேரெழுந்தூர் தேவாதிராஜனை மனமுருக வணங்கி, வழிபட்டாள். அவளுக்கு ஆறுதலளித்த பெருமாள் அவள் சாபத்தையும் நீக்கி, அவள் பாயும் பகுதிகளெல்லாம் குன்றாத வளம் கொழிக்கச் செய்தார்.

வழக்கமாக கருடன் துவஜஸ்தம்பத்துக்குக் கீழே, பெருமாளை நேர்ப் பார்வையாகப் பார்த்தபடிதான் அமைந்திருப்பார். ஆனால் இத்தலத்தில் அவர் பெருமாளுக்கு அருகிலேயே பவ்யமாக வணங்கியபடி காட்சி தருகிறார். இதற்கும் ஒரு காரணம் உண்டு. ஒருசமயம் தேவேந்திரன், கருடனைக் கூப்பிட்டார். தன்னிடம் இருந்த வைர முடியையும், விமானத்தையும் அவனிடம் தந்தார். அவை பெருமாளுக்கு உரித்தானவை என்றும், அவற்றை எந்தெந்த பெருமாளுக்குப் பொருத்தமோ அவரவரிடம் சேர்ப்பித்துவிடுமாறும் கேட்டுக்கொண்டார். கருடன், தன் அனுபவ அறிவின் அடிப்படையில், வைர முடியை கர்நாடக மாநிலம், மைசூர், திருநாராயணபுரத்திலுள்ள செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் சமர்ப்பித்தான். விமானத்தை தேரழுந்தூர் தேவாதிராஜனுக்கு அர்ப்பணித்தான். தனக்கு விமானம் அளித்து, தன் இருப்பிடத்துக்குப் புதுப் பொலிவு சேர்த்த கருடனுக்கு தனி மரியாதை அளிக்க விரும்பினார், தேவாதிராஜன். அதனாலேயே, வழக்கமாகத் தனக்கு நேர் எதிரே சற்றுத் தொலைவில் அமர்ந்தபடி வணங்கும் கருடனை, இந்தத் தலத்தைப் பொறுத்தவரை தனக்குப்பக்கத்திலேயே இருத்திக்கொண்டார்.

இங்குள்ள யோக நரசிம்மர் சந்நதியும் குறிப்பிடத் தகுந்தது. இதே தலத்தில் பிறந்து ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய தன் பக்தன் கம்பனுக்கு ஏற்படவிருந்த அபவாதத்தை அங்கேயே விரட்டியடித்தவர். ஆமாம், கம்ப ராமாயணத்தில் ராவணனுக்கு, ஹிரண்யவதை படலத்தை விளக்கிச் சொல்லி, அவனைத் திருத்த முயன்றான், விபீடணன். இந்தப் படலம் வால்மீகியின் ராமாயணத்தில் இல்லை. அவர் இயற்றிய ராமாயணத்தை கம்பர் ‘மொழிமாற்றம்’ செய்தார் என்பதை முன்னிலைப்படுத்தி, மூலத்தில் இல்லாததைப் புகுத்தக்கூடாது என்று அரங்கத்தில் சான்றோர் வாதிட்டனர். அப்போது இந்த யோக நரசிம்மர் அங்கே மேட்டு அழகிய சிங்கராகத் தோன்றி, வாதம் செய்தவர்களை அடக்கி, கம்பர் இயற்றியது சரியே என ஆமோதிக்கும் வகையில் கர்ஜனை புரிந்தார். தன் மண்ணில் உதித்தவனைத் தான் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று செயல்பட்ட அந்த தெய்வம் இங்கே அந்த நிறைவில் மகிழ்ச்சிப் புன்னகையுடன்
அழகாக வீற்றிருக்கிறது.

தியான ஸ்லோகம்
“க்ருஷ்ணாரண்யே ஜகத்யாம் உபரிசரவ ஸோஸ் ஸ்யந்தனம் யத்ர மக்னம்
தஸ்மிந் தேவாதிராஜ: ஸதந ஸஹ சரீ ரக்த பத்மா பிதாநா
தீர்த்தம் தர்ச பிரஸித்தம் கலிமலஹரணம் காருடம் தத்விமாநம்
காவேரி கும்பஜாப்யாம் உபரிசர வஸோ: ப்ராங்முகஸ் ஸுப்ரஸந்ந:’’

எப்படிப் போவது: மயிலாடுதுறை – கும்பகோணம் பாதையில் அமைந்துள்ளது, தேரழுந்தூர். மயிலாடுதுரையிலிருந்து பேருந்து ஆட்டோ வசதி உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 12 மணிவரை; மாலை 5 முதல் 9 மணிவரை.
முகவரி: அருள்மிகு ஆமருவியப்பன் திருக்கோயில், 4-14, சந்நதி தெரு, தேரழுந்தூர், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம் – 609808.

The post தேரழுந்தூர் தேவாதிராஜன் appeared first on Dinakaran.

Tags : Devathirajan ,Therajunthur Devathirajan ,
× RELATED மாத்தூரில் பெற்றோர் கண் எதிரே பரளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி