குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவெற்றியூர் மண்டலம், 12வது வார்டு சபை கூட்டம், புது தெருவில் நடைபெற்றது. கவுன்சிலர் கவிகணேசன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் சுகாதாரம் குடிநீர் வாரியம், மின்சாரம், வருவாய், காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று மக்கள் குறைகளை கேட்டறிந்தனர். பகுதி சபை கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், அரசு சோலார் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வரும் நிலையில், சாலை, தெரு விளக்குகளுக்கு ஏன் சோலார் திட்டம் செயல்படுத்த முடியவில்லை.

அரசு நல்ல திட்டங்களை அறிவிக்கிறது. இதை அதிகாரிகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும். மழைநீர் கால்வாயில் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். வயதானவர்களுக்கு இலவசமாக மருத்துவம் வழங்குவதற்கு குழு அமைக்க வேண்டும், என்றனர். இதில் பதில் அளித்து கவுன்சிலர் கவிகணேசன் பேசுகையில், ‘குப்பை இல்லா நகரத்தை உருவாக்க அரசு தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் வீடுகளில் இருந்து தக்காளி, வெங்காய கழிவுகளுடன் நாப்கின், மருத்துவ ஊசிகள், உடைந்த கண்ணாடி போன்றவைகளை பொதுமக்கள் சேர்த்து வழங்குகின்றனர்.

இதனால் தூய்மை பணியாளர்கள் குப்பையை தரம் பிரிக்கும்போது கையில் ஊசி குத்தி ரத்தம் வெளியேறுகிறது. எனவே உணவு கழிவுகள், காய்கறிகள் மருத்துவக் கழிவுகள் என தனித்தனியாக தரம் பிரித்து தரவேண்டும். பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் படிப்படியாக சரிசெய்வார்கள்,’ என்றார். கூட்டத்தில், உதவி பொறியாளர் சாருமதி, முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், திமுக நிர்வாகிகள், கிராம நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: