×

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்

வந்தவாசி: ஆன்லைன் சூதாட்டம் நடத்தி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் அருண் என்கிற அருணாசலம் (50). இவர் ஏற்கனவே லாட்டரி வியாபாரம் செய்தவர். இவரது தம்பி செந்தில்குமார் பாஜ முன்னாள் நகரச்செயலாளர். கடந்த நகராட்சி தேர்தலில் பாஜ சார்பில் 17வது வார்டில் போட்டியிட்டவர். அருணாசலம் வீட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில், திருவண்ணாமலை எஸ்பி (பொறுப்பு) ஸ்ரேயா குப்தா தலைமையில் வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன் மற்றும் போலீசார் அவரது பங்களாவில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கணினி மூலம் ஆன்லைன் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, தாசில்தார் பொன்னுசாமி முன்னிலையில் விசாரணை மேற்கொண்டதில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 9 செல்போன்கள், ரூ.48.50 லட்சம், 83 பவுன் நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சையத் இப்ராஹிம் (44), என்பவர் இதில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அருணாசலத்தையும், சையத் இப்ராஹீமையும் ேபாலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம், 6 பவுன் நகை, ஒரு லேப்டாப், 2 விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சையத் இப்ராஹிம் 6 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதால் அவரை வேலைக்கு அமர்த்தி வந்தவாசி, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு அருணாசலம் கோடிக்கணக்காண பணத்தை சுரண்டியது தெரியவந்தது. இருவரிடமும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அருணாசலத்திடம் கைப்பற்றப்பட்ட பணம், நகை ஆகியவற்றை ஆரணி நீதிமன்றத்தில் நேற்று போலீசார் ஒப்படைத்தனர். கைதான 2 பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அருணாசலம் கொடுத்த தகவலின் பேரில் செய்யாறு பகுதியை சேர்ந்த பிரபல காட்டன் சூதாட்ட வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைக்கு சென்ற நபர் மற்றும் வந்தவாசி நகரை சேர்ந்த வாலிபர் என இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் பகுதியில் அருணாசலத்தை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்ட முக்கிய நபரை போலீசார் தேடி சென்றதும் அவர் தலைமறைவானார். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு வந்தவாசி போலீசார் தகவல் கொடுத்த நிலையில் காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி மார்டின் நேற்று வந்தவாசி தெற்கு காவல் நிலையம் வந்து தகவல்களை கேட்டறிந்தார். கைப்பற்றபட்ட 11 செல்போன்களிலும் எந்த எண்ணில் இருந்து அதிக அளவில் தொடர்பு கொண்டுள்ளார்களோ அவர்களை விசாரணை நடத்தி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vandavasi ,Arun ,Arunachalam ,Potti Naidu Street, Vandavasi ,Tiruvannamalai district ,Senthilkumar Baja ,
× RELATED ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காஞ்சிபுரம் ஏஜென்ட் கைது