பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்

சென்னை: பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி “சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்” என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு
வருகின்றன. அதன்படி, பெரியாரின் 146வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்றைய தினம் சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உறுதிமொழியை வாசிக்க அவரைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச்செயலர் முருகானந்தம், அரசு துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின் முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உறுதிமொழி
* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைப்பிடிப்பேன்.
* சுயமரியாதை, ஆளுமை திறனும் – பகுத்தறிவு பார்வை கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
* சமத்துவம், சம தர்மம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
* மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
* சமூகநீதியை அடித்தளமாக கொண்ட சமூதாயம் அமைத்திட இந்தநாளில் உறுதி ஏற்கிறேன்.

The post பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: