இன்று மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மீலாது நபியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி: பெருமகனார் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நபிகள் நாயகத்தின் பொன்மொழிக்கேற்ப, நல்ல உள்ளத்தோடு, நற்செயல்களான, கருணை, பொறுமை, ஈகை, சகிப்பு தன்மை, மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடிக்க அனைவரும் உறுதி ஏற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நபிகளின் வழியில் இன்னா செய்தாருக்கும் நன்னயமே செய்து விடுங்கள்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இருப் பதில் ஒரு பங்கை இல்லாதவர்களுக்கு கொடுத்து இன்பம் தேடுங்கள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பல்வேறு அரும்பெரும் குணங்களின் கொள்கலனாக, கருவூலமாகத் திகழ்ந்த பெருமைக்குரிய அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த நன்னாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இனிய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் சிறப்புக்களையும், போதனைகளையும் அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். உள்ளமும், செயல்பாடும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை மனதில் வைத்து வாழ்ந்தால் அனைவரும் வாழ்வில் சிறக்கலாம்.
பாமக தலைவர் அன்புமணி: நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பாடத்தை படிப்பது மட்டுமின்றி, அதன்படியே அனைவரும் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த உலகமும் அமைதி தவழும் அன்பு இல்லமாக மாறும்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் நாடு முழுவதும் அமைதி நிலவட்டும், சகோதரத்துவம் தழைத்தோங்கட்டும்.
இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர்: நபிகள் வழியில் நாம் நடந்தால் நாளும் நலமும் வளமும் சூழ்ந்து நிற்கும் என்பதை மனதில் நிறுத்துவோம். சாதி,மத பேதங்களை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் பயணித்து வளமான வசந்தமான வாழ்க்கையை வாழ்வோம்.

The post இன்று மீலாது நபி: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: