இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி முடிந்து சென்னையில் சிலைகளை கரைக்க இன்றைய தினம் காவல்துறையினரால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காலை 7 மணி முதல் மாநகரில் உள்ள பிரதான கடற்கரைகளான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை மேதள தாளம் முழங்க கொண்டாட்டத்துடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர். நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர்.நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. அதேபோல், அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து கொண்டுவந்த விநாயகர் சிலைகள் நீலாங்கரை கடற்கரையில் கரைக்கப்பட்டன. வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர் மற்றும் மாதாவரம் பகுதியில் இருந்து வந்த சிலைகள் காசிமேடு கடற்கரையில் கரைக்கப்பட்டன. திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருவொற்றியூர் கடற்கரையில் கரைக்கப்பட்டன.
மேலும், பாதுகாப்பான முறையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பட்டினப்பாக்கத்தில் 90 அடி டிராலி ஒன்று உருவாக்கப்பட்டு அதில் ஐந்து முதல் ஏழு அடி வரை உள்ள விநாயகர் சிலைகள், டிராலியின் உதவியுடன் கரைக்கப்பட்டன. அதேபோல், ஏழு அடிக்கு மேல் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளுமே ராட்சத கிரேன் மூலம் நேரடியாக கடலில் கரைக்கப்பட்டன. இதுதவிர, விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருக்க காவல்துறையினர் தரப்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி, நீச்சல் தெரிந்த வீரர்களும், மீனவர்களும் சிலை கரைக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அதேபோல், சிலை கரைப்பு நிகழ்வில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க மாநகர் முழுவதும் சென்னை காவல் ஆணையர் அருண் மேற்பார்வையில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையர்கள் உட்பட 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுதவிர, கூடுதலாக 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மூன்று உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டனர். சென்னையில் சிலை கரைக்கும் 4 இடங்களிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அந்த கேமராக்களின் காட்சிகளை பார்வையிட எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல், தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினர், உள்ளிட்டோரும் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இதுமட்டுமின்றி, விநாயகர் சிலைகளை கரைக்கும் போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருக்க கடற்கரை முழுதும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் 4 இடங்களில் 1500 விநாயகர் சிலைகள் கரைப்பு: மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.