காட்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு பொருட்கள் சதியை தடுக்க மோப்ப நாயுடன் போலீசார் ஆய்வு

வேலூர் : வேலூர் ரயில்கள் மீது கற்கள் வீசுதல், தண்டவாளத்தில் கற்கள் அல்லது இரும்பு பொருட்களை வைத்தல் போன்ற சதி செயல்களை தடுக்கும் வகையில் காட்பாடியில் மோப்பநாய் கொண்டு ரயில்வே போலீசார் சோதனை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நாடு முழுவதும் ரயில்வே தண்டவாளங்களை அஜாக்கிரதையாக கடந்து பலர் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல் ரயில் மீது கற்கள் வீசுவது, தண்டவாளத்தில் பெரிய கற்களை வைப்பது போன்ற சதிச்செயல்களிலும் விஷமிகள் சிலர் ஈடுபடுகின்றனர். இதனை ரயில்வே போலீசார் கண்காணித்து தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள தண்டவாளங்களை மோப்பநாய் கொண்டு சோதனை நடத்த பாதுகாப்பு படை போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். குறிப்பாக இன்னும் சில வாரங்களில் ஆயுதபூஜை, தீபாவளி என வரிசையாக பண்டிகை கால விடுமுறை நாட்கள் வர உள்ளதால் ரயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வார்கள் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ருவந்திகா தலைமையில், நேற்று காலை தண்டவாளத்தில் மோப்பநாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர்.

மேலும் தண்டவாளம் அருகே வசிக்கும் குடியிருப்பு வாசிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். அப்போது தண்டவாளங்களை கவனக்குறைவாகவோ, செல்போனில் பேசிக்கொண்டோ கடக்கக்கூடாது. பயணிகள் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண் டும். ரயில் மெதுவாக சென்று கொண்டிருக்கும்போது அதிலிருந்து குதித்து இறங்க கூடாது, தண்டவாள பாதை அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கக்கூடாது.

ரயில் மீது கல் எறிபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். தண்டவாளத்தையொட்டி குடியிருக்கும் மக்கள் தங்களுடைய ஆடு மற்றும் மாடுகளுடன் அதன் வழியாக கடக்க கூடாது. ரயில் பாதைக்கு உட்பட்ட இரும்பு பொருட்களை எடுத்து சென்றால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post காட்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு பொருட்கள் சதியை தடுக்க மோப்ப நாயுடன் போலீசார் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: