பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ‘பேரறிஞர்’ அண்ணாவின் பிறந்தநாளான செப். 15-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று 116-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர்கள் பலரும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படம், திருவுருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும் அண்ணாவின் நினைவுகளையும், தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்றிய தொண்டையும் நினைவுப்படுத்தும் வகையில், பலரும் வாழ்த்துகளை பதிவு வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, செகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • முதல்வர் எக்ஸ் தள பதிவு

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா

தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன். ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

The post பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: