அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்

சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார்.

அப்போது அவர், நீதிமன்ற சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு. நீதிமன்ற சம்மன் எதுவும் வரவில்லை. நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, சென்னையில் இருந்த போதும், திருநெல்வேலி மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் இருந்த போதும் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் கடிதங்கள் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன். ஆனால் சம்மன் எதுவும் வரவில்லை என்று கூறினார்.

The post அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: