வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அதிகாரப்பூர்வமான தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பதினாறு பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். இது ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சென்னி மலைக்குச் செல்லும் வழியில் 16.7 கிமீ தொலைவில் வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் அமைந்துள்ளது. ஈரோடு ரயில் நிலையச் சந்திப்பிலிருந்து 14.9 கிமீ தொலைவில் உள்ளது. இது 1996 ஆம் ஆண்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. இந்த சரணாலயம் ஏரி, ஓடைகளை உள்ளடக்கி 77.185 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.
இது நிலத்தடி நீரின் முக்கிய ஆதாரமாக உள்ளது. கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 38oC முதல் குளிர்காலத்தில் குறைந்தபட்சம் 19oC வரை இருக்கும். இந்த சரணாலயம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து பெறுகிறது. வெள்ளம் மற்றும் கடுமையான மழையின்போது இங்குள்ள தாவரங்கள் ஒரு கடற்பாசி போல் செயல்படுவதன் மூலம் சதுப்புநிலம் போல் மாறுகிறது. இந்தச் சதுப்புநிலத்தில் மணல் அல்லது வண்டல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதில்லை. இது பறவைகளுக்கு ஒரு நீர் சேமிப்புப் பகுதியாகவும், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யவும் பயன்படுகிறது. இந்த ஏரி கீழ்பவானி திட்டக் கால்வாய் அமைப்பில் இருந்து (கீழ் பவானி அணையின் வெளியேற்றம்) கசிவுநீர் மூலமாகவும், வடகிழக்குப் பருவமழையின் மழைநீர் மூலமாகவும் நீர்வரத்து பெறுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த பறவைகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இப்பகுதிக்கு வரத் தொடங்கும். இதனால் பறவைகள் சரணாலயம் பருவமழையின் தொடக்கத்தில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கு ஏற்ற இடமாக மாறுகிறது. ஏனெனில் ஏரி மற்றும் சுற்றியுள்ள விவசாய வயல்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் உணவு தேடியும் இனப்பெருக்கம் செய்யவும் வருகின்றன. இங்கு ஓய்வெடுக்கவும் கூடு கட்டுவதற்கும் நிறைய மரங்கள் உள்ளன. ஏராளமான மீன் இனங்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு உணவாகவும் உள்ளது. சரணாலயத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றன. பறவை இனங்கள் பிந்தில் வாத்துகள், பெலிகன்கள் ஆகியவை அடங்கும். இச்சரணாலயத்தில் பறவைகளைக் காணப் பல பார்வை கோபுரங்கள் இந்த ஏரியைச் சுற்றி உள்ளன. இந்த ஏரி தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
The post வெள்ளோடு பறவைகள் சரணாலயம்! appeared first on Dinakaran.