அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

அருகம்புல் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய தாவரமாகும். அருகம்புல்லிற்கு பதம், தூர்வை, மேககாரி, கணபதிபத்திரம் என பல பெயர்கள் உள்ளன, இவற்றில் கொடியருகு, ஆனையருகு, வெள்ளையருகு என மூன்று அருகுகள் உள்ளன. அருகம்புல்லின் வேர்கள், இலை, தண்டு என அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அருகம்புல் இனிப்புச் சுவையுடையது. குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது. வெட்டுக்காயத்தை ஆறவைப்பதுடன், உதிரப்போக்கை கட்டுக்குள் வைக்கும்.

வாத, பித்த, ஐயம், ஈளை அறுக்கும், அறிவு தரும், கண்ணொளி தரும், தலைநோய் போக்கும் என்று அருகம்புல்லின் மருத்துவ குணத்தை அகத்தியர் குணபாட நூலில் கூறியுள்ளார். பயனுள்ள அருகம்புல்லின் பயன்களை பார்க்கலாம்.

தோல் நோய்கள்

அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூச சொறி, படர்தாமரை போன்ற தோல் நோய்கள் குணமாகும். கஞ்சாங்கோரை, கடுக்காய், இஞ்சி, இந்துப்பு ஆகியவற்றுடன் அருகம்புல்லை மோர் விட்டு அரைத்து மேல் பூச்சாகப் பூசினால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

கொடி அருகம்புல்லின் வேரைப் பற்றி பதார்த்த குணசிந்தாமணி மிக அருமையாக எடுத்துரைக்கிறது. அதாவது, ஆறா அழல் மாறுவதுடன், முத்தோஷம் மீறாமல் இருக்க கொடி அருகம்புல்லின் வேர் பயன்படுகிறது.கை, கால் எரிச்சலுக்கு அருகம்புல்லை பயன்படுத்தி தயாரிக்கப்படும் துருவாதித் தைலத்தை பயன்படுத்தலாம். அருகம்புல் சாறு, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அதிமதுரம் தேவையான அளவு எடுத்து ஒரு இரும்புச்சட்டியில் சேர்த்து காய்ச்ச தைலம் தயாராகிவிடும். இது வெளிப் பூச்சுக்கு உகந்தது.

உடல் சோர்வு

சுமார் 50 மில்லி அருகம்புல் சாறை – நாள்தோறும் காலையில் அருந்தி வந்தால் கை, கால் வலிப்பு, ரத்த சோகை, உடல் சோர்வு, அடிக்கடி மயக்கமாதல், சித்தப் பிரமை போன்ற நோய்கள் குணமாகும்.

கண் ஒளி பெற

அருகம்புல் சமூலம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 150 கிராம் ஆகியவற்றை உடைத்து 2 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலில் வைத்து எடுக்கவும். இதை 90 நாட்கள் தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

வயிற்று வலியுடன் கூடிய காய்ச்சல்

அருகம்புல் வேர், முதியார் கூந்தல் மூலிகை, சுக்கு, மாம்பட்டை ஆகியவற்றை வகைக்கு இருபது கிராம் வீதம் எடுத்து பொடித்து இரண்டு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து 250 மில்லியாக சுருக்கிக் கொள்ளவும். இந்தக் குடிநீரில் சுமார் 75 மில்லி அளவு எடுத்து, இலவம் விதைத் தூளுடன் கலந்து அருந்தினால், வயிற்றுவலியுடன் கூடிய காய்ச்சல் தீரும்.

தீராத வெள்ளைப் போக்கு

அருகம்புல், காக்கணம் வேர், கீழாநெல்லி இலை, கட்டுக்கொடி இலை ஆகியவற்றை வகைக்கு ஒரு பிடி அளவு எடுத்து, அத்துடன் ஏழு மிளகு சேர்த்து, விழுதாக அரைத்து இரண்டு பங்குகளாக்கிக் கொள்ளவும். காலையில் ஒரு பங்கையும் மாலை ஒரு பங்கையும் பசுந்தயிருடன் சாப்பிடவும். புளி, காரம் நீக்கி மூன்று நாட்கள் பத்தியத்துடன் உண்டு வர தீராத வெள்ளைப் போக்கு தீரும்.

குடல் புண்கள்

அருகம்புல் வேர் 50 கிராம், சிறுகீரை வேர் 20 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் ஆகியவற்றை பொடித்து ஒருலிட்டர் தண்ணீரில் இட்டு 250 மில்லியாக சுருக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் குடிநீரில் 100 மில்லி அளவு எடுத்து தேவைக்கு ஏற்ப பாலும், கற்கண்டும் சேர்த்து காலை, மாலை இரண்டு வேளைகள் பத்து நாட்கள் அருந்தி வந்தால் குடல் புண்கள், வாய்ப்புண்கள் ஆறும்.

இளைப்பு

அருகம்புல், துளசி, வில்வ இலை ஆகியவற்றை வகைக்கு 2 கிராம் அளவு எடுத்து, சுமார் அரைலிட்டர் கொதிநீரில் போட்டு மூடி ஓர் இரவு வைத்துவிடவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்தக் குடிநீரைப் பருகி வர, இளைப்பு நீங்கும்.

அரிப்பு, தடிப்பு

அருகம்புல், மாதுளை இவை இரண்டையும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒருதேக்கரண்டி சீரகம் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர்விட்டு காய்ச்சி ஒரு டம்ளர் அளவுக்கு சுருக்கிக் கொள்ளவும். இக்குடிநீரை காலை வெறும் வயிற்றில் அருந்தவும். இப்படி 10 நாட்கள் வரை அருந்தி வந்தால், ஒவ்வாமையால் உண்டாகும் அரிப்பு, தடிப்பு போன்றவை குணமாகும். ரத்த சர்க்கரை அளவு சீராகஅருகம்புல்லை இடித்துச் சாறு பிழிந்து, சுமார் 100 மில்லி அளவு நாள்தோறும் காலையில் சாப்பிட வேண்டும். இப்படி40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

தொகுப்பு: தவநிதி

The post அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: