கோபால சுந்தரியாக ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

நாம் சென்ற அத்தியாயத்தில் ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் உபநிஷத பிரமாணமான முப்பத்திரண்டு வித்தைகளை காண்பித்துக் கொடுத்து, அதையும் தாண்டி முப்பத்து மூன்றாவது வித்யையாக தானே இருந்து அருள்பாலிக்கிறான் என்றும் பார்த்தோம். இப்போது ஸ்ரீ வித்யா என்று சொல்லக்கூடிய அம்பாள் உபாசனையானது, சிவசக்தி ஐக்கியத்திற்கான உபாசனை என்றும் பார்த்தோம். அந்த உபாசனையில் மந்திர பேதங்கள் நிறைய உண்டு. பொதுவாகவே ஸ்ரீ வித்யா உபாசனை என்றாலே அதன் முக்கிய மந்திரங்களாக பஞ்சதசி, ஷோடசி என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனாலும் கூட, அந்த ஸ்ரீ வித்யா மந்திர பேதங்களுக்குள், இன்னொரு மந்திரம் இருப்பதை நாம் காண்கிறோம். அந்த மந்திரத்திற்குத்தான் கோபால சுந்தரி என்று பெயர். அந்த கோபாலசுந்தரி மந்திரத்திற்கென்றே இருக்கக்கூடிய ஒரு ரூபம் மற்றும் கோபாலசுந்தரி என்கிற மந்திரத்திற்கென்றே இருக்கக் கூடிய க்ஷேத்ரம் எதுவெனில், மன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலனே ஆகும். இந்த கோபாலசுந்தரி வித்யையை கண்களால் பார்க்க வேண்டுமெனில், நாம் மன்னார்குடிக்குப் போகவேண்டும். ஏனெனில், சுவாமி அங்கு கோபாலசுந்தரி ரூபத்தில் இருக்கிறார்.கோபாலசுந்தரியினுடைய தியான ஸ்லோகத்தை நாம் பார்க்க வேண்டும். பாற்கடல் மத்தியில் கற்பக விருட்சங்களாலான ஒரு காடு இருக்கிறது. அதிலுள்ள ஒரு கற்பக விருட்சத்திற்கு அடியிலுள்ள சிம்மாசனத்திற்குக் கீழே சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.

எட்டு கைகளில், பாசம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பானம் என்று உண்டு. இந்த நான்குமே அம்பிகையினுடையது என்பது அனைவரும் தெரியும். மனோ ரூபேக்ஷு கோதண்டா, பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது. இந்தஅம்பிகைக்குரிய நான்கும், அதற்குப் பிறகு இன்னொரு இரண்டு கைகளில் சங்கு, சக்கரம், இன்னும் இரு கரங்களில் வேணுகானம் வாசிக்கிறான். அப்போது இந்த மொத்த ரூபமே கோபால சுந்தரிதான். இந்த விஷயத்தை லீலா சுகர் என்கிற ஞானி கிருஷ்ண கர்ணாம்ருதம் என்று தான் எழுதிய நூலில் மதனகோபால சுந்தரி என்று குறிப்பிடுகிறார். மேலும், அதற்கொரு ஸ்லோகத்தையும் அருளிச்செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ரூபத்தைத்தான் நாம் மன்னார்குடியில் தரிசிக்கின்றோம். சரி, இதில் பெரிய விசேஷம் என்னவெனில், நாம் முப்பத்திரண்டு வித்யையைக் காண்பித்துவிட்டு, இந்த வித்யைகளால் அடையப்படக் கூடியவன் நானே என்றும், முப்பத்து மூன்றாவது வித்யையாக தன்னைக் காண்பித்துக் கொண்டார் என்பதையும் பார்த்தோம். அந்த முப்பத்து மூன்றாவது வித்யைதான் நாம் ஸ்ரீ வித்யா என்று சொல்கிறோம். அல்லது கோபாலசுந்தரி வித்யா என்றும் சொல்லலாம். இந்த இடத்தில் நாம் கோபால சுந்தரியை ஹ்ருதயத்தில் தியானம் செய்கிறோம்.

அப்போது ஹ்ருதயம்தான் நமக்கு தஹராகாசமாக இருக்கிறது. இங்கு பகவான் முப்பத்திரண்டு உபநிஷத் வித்யைகளை லீலைகள் மூலமாகக்காண்பித்துவிட்டு, முப்பத்து மூன்றாவது வித்யையே தான் தான்என்று காண்பிப்பதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதையும் பார்ப்போம் வாருங்கள். கோபாலசுந்தரி மந்திரத்தில் மொத்தம் எத்தனை அட்சரங்கள் தெரியுமா? மொத்தம் முப்பத்து மூன்று அட்சரங்கள். இந்த கோபாலசுந்தரி மந்திரம் எப்படி முப்பத்து மூன்று அட்சரங்களாக இருக்கிறதோ, அதுபோல முப்பத்திரண்டு வித்யை காண்பித்து விட்டு முப்பத்து மூன்றாவது வித்யையாக தானே இருக்கிறார். ஏன், கோபால சுந்தரி மந்திர வித்யையில் முப்பத்து மூன்று அட்சரங்கள் எனில், அம்பாளுக்குரிய பஞ்சதசாக்ஷரி மந்திரத்தில், பதினைந்து அட்சரங்களையும், கிருஷ்ணனுக்குரிய ராஜகோபால வித்யா என்கிற பதினெட்டு அட்சரங்களையும் சேர்த்து சம்மேளனம் செய்து ஜபம் செய்தால் அதற்குப் பெயர்தான் கோபால சுந்தரி வித்யா. எந்த சத்திய வஸ்து அம்பிகையாக அருள்கிறாளோ அவளே, இங்கு கிருஷ்ணனாக காட்சி கொடுக்கிறது என்றுகாண்பிக்கக் கூடிய ஒரு வித்யை. ஸ்ரீ வித்யா ரூபமாக இருப்பதால் அவருக்கு ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் என்கிற திருப்பெயர் ஏற்பட்டது.

இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவெனில், வித்யா என்றாலே மந்திரங்கள் என்றும், ஞானம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அதிலேயும் பரமாத்மாவைப் பெண்வடிவத்தில் தாயாராக அம்மாவாகப் பார்க்கும்போது அங்கு நாம் உபயோகப்படுத்தக்கூடிய மந்திரங்களுக்கெல்லாம் வித்யா என்று பெயர். ஸ்ரீ வித்யா, தச மஹா வித்யா என்று அம்பாளினுடைய மந்திரங்களுக்கெல்லாம் வித்யா… வித்யா… என்று வரும். வித்யா என்றாலே அது அம்பிகையின் மந்திரம் என்று அர்த்தம். காளி வித்யா, புவனேஸ்வரி வித்யா என்று எத்தனையோ இருக்கிறது. இந்த வித்யைகளையெல்லாம் கடந்துபோய் இறுதியாக லலிதாம்பிகையை அடையும்போது, அங்கு நாம் சொல்லக்கூடிய வித்யைக்கு ஸ்ரீ வித்யா என்று பெயர். அதற்கு லலிதா வித்யா, ராஜராஜேஸ்வரி வித்யா என்றெல்லாம் கிடையாது. வெறும்ஸ்ரீ வித்யா என்று மட்டுமே பெயர். ஸ்ரீ வித்யா என்று சொன்னாலே அது லலிதாதான் என்று நமக்கு தெரிந்துவிடும். நாம் பஞ்சாட்சர (ஓம் நமசிவாய) மந்திரத்தை ஸ்ரீ பஞ்சாட்சரம் என்று சொல்வதில்லை. நாராயண அஷ்டாக்ஷர மந்திரத்தை (ஓம் நமோ நாராயணா) ஸ்ரீ அஷ்டாக்ஷரம் என்று சொல்வது கிடையாது. ஆனால், அம்பிகைக்குரிய மந்திரத்தை மட்டும் ஸ்ரீ வித்யா என்று சொல்கிறோம்.

அதேபோல், சமயங்களை எடுத்துக்கொள்வோம். அதிலும், ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஷண் மதங்கள் (ஆறு மதங்கள்) என்று இந்துமதத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்தார். கணபதி, கௌமாரம், சைவம், ஸ்ரீ வைணவம், சாக்தம், சௌரம் என்று பார்க்கலாம். இதில் எந்த மதத்திற்கும், எங்குமே மதத்தின் பெயரோடுஸ்ரீ என்கிற பதத்தை உபயோகப்படுத்தவில்லை. ஆனால், வைஷ்ணவத்திற்கு மட்டும்தான் ஸ்ரீ வைஷ்ணவம் என்று சொல்கிறோம். இதில் அம்பிகையினுடைய உபாசனையை சொல்லக்கூடிய சாக்தத்திற்குக்கூட ஸ்ரீ சாக்தம் என்று சொல்வது கிடையாது. தமிழகத்தில் எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜருக்குப் பிறகு ஸ்ரீ என்கிற பதமானது பிராட்டியாருடைய முக்கியத்துவத்தை காண்பிப்பதற்காக ஸ்ரீ வைஷ்ணவம் என்று சொல்லப்பட்டது.எப்படிஅம்பிகையினுடைய முக்கியத்துவத்தை காண்பிப்பதற்காக அந்த வித்யாவிற்கு ஸ்ரீ வித்யா என்று பெயரோ, அதேபோல பிராட்டியினுடைய முக்கியத்துவத்தைக் காண்பிப்பதற்காக இங்கு ஸ்ரீ வைஷ்ணவம் என்று வைத்திருக்கிறார்கள். அப்போது, இந்தப் பக்கம் ஸ்ரீ வித்யா, அந்தப் பக்கம் ஸ்ரீ வைஷ்ணவம் என்று இரண்டும் ஒருசேர சங்கமிப்பது எங்கெனில், அது ராஜகோபாலனிடம்தான். ஏனெனில், ராஜகோபாலன் மந்திரப் பூர்வமாக ஸ்ரீ வித்யா மூர்த்தியாக (ஸ்ரீ வித்யா ராஜகோபாலன்) இருக்கிறார். ஆனால், அவருடைய தலம், அவருக்கு நடைபெறும் பூஜைகளெல்லாம் எப்படி இருக்கிறதெனில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய மரபுப்படி நடைபெறுகிறது.அப்போது இரண்டு பெரும் சம்பிரதாயம் இணைகின்ற இடமாக மன்னார்குடி அமைந்துள்ளது. (தொடரும்)

தொகுப்பு: ஸ்ரீ தத்தாத்ரேய சுவாமிகள்

 

The post கோபால சுந்தரியாக ஸ்ரீவித்யா ராஜகோபாலன் appeared first on Dinakaran.

Related Stories: