விருச்சிக ராசி முதலாளி வெற்றியே இலக்கு!!

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே நல்ல ஆளுமையும், அதிகார மனோபாவமும் பெற்றவர்கள். இவர்களுக்குச் செவ்வாய் ராசி அதிபராவதால், உடல் வலிமையும் ஆணவப் போக்கும் அதிகார தோரணையும் இருக்கும். பார்க்க அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும், உள்ளுக்குள் கொந்தளிக்கும் எரிமலை என்றே சொல்லலாம்.

திட்டங்களும் செயல்பாடும்

விருச்சிக ராசி, முதலாளிகள் செயல் திட்டங்களைத் தீட்டுவதில் வல்லவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் நடுவயதில் அதாவது 30-40 வயதில் ஒரு நிறுவனத்தின் முதலாளியாகவோ ஒரு குழுவின் தலைவராகவோ, டீம் லீடராகவோ ஆகிவிடுவர். துறைத் தலைவர் அல்லது செக்க்ஷன் ஆபீஸர் என்ற அளவில் தலைமைப் பொறுப்பேற்று செயல்படக்கூடிய நிலையை அடைந்துவிடுவார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது

விருச்சிக ராசி முதலாளிகளுக்குப் பிறர் எவரும் தன்னுடைய திட்டங்கள் பற்றிய சந்தேகங்களை எழுப்பக் கூடாது. அது பிடிக்காது. தன் கட்டளைகளைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது. சொன்னதை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பர்.

பாசத்துக்கு அடிமை

அதிகளவில் கட்டுப்பாடுகளை விதிக்கும் விருச்சிக ராசி முதலாளிகளை, பாசத்தால் கட்டிப் போடலாம். குறிப்பாக, அன்பும் பண்பும் அமைதியும் நிறைந்த மீன ராசிக்காரர்கள், இவர்களை பாசத்தால் கட்டிவிடுவார்கள். மற்றவருக்குத் தெரியாத இவர்களின் நுட்பங்களையும் உள் மனதின் ரகசியங்களையும் மீனராசிக்காரர்களால் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

சொந்த விஷயங்கள் கூடாது

விருச்சிக ராசிக்காரர் நெருப்பு ராசிக்காரரோடும், காற்று ராசிக்காரர்களும் இணக்கமாக இருப்பார்கள். சேர்ந்து பயணிப்பார்கள். ஏனெனில் இவர்களின் குணங்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகும். விருச்சிக ராசி முதலாளி எப்போதும் ஒருபோதும் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றிய நிகழ்ச்சிகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள மாட்டார். தான் சிறுவயதில் பட்ட கஷ்டம், அனுபவித்த கொடுமை பற்றி யாரிடமும் சொல்லமாட்டார். ஒரு பக்கம் மர்ம மனிதராகவே இருப்பார். இன்னொரு பக்கம் அதிகாரம் நிறைந்தவராக இருப்பார். இவருடைய குடும்பம், இவருடைய ஊர், நண்பர்கள் என்று இவரைப் பற்றிய விஷயங்களை இவர் வெளியே சொல்ல மாட்டார். மற்றவர்களின் சொந்த விஷயத்தைக் கேட்பதில் இவருக்கு ஆர்வம் இருக்காது.

விருந்து, சுற்றுலா ஆகாது

பணியாட்களின் குடும்ப விவரங்களைக் கேட்டு, அவர்களுக்கு ஆலோசனை சொல்வதெல்லாம் இவரிடம் காண இயலாது. ஃபேமிலி கெட்டு கெதர் (family get together) குடும்பக் கூடுகை என்பன இவர்கள் கம்பெனியில் பார்ப்பது அரிது. பணியாட்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது, பணியாட்களுக்கு விருந்து வைப்பது போன்ற விஷயங்களில் இவருக்கு ஆர்வம் இருக்காது. யாராவது மேலாளர், நிர்வாகி போன்றோர் விருந்து, சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தால், இவர் தனிநபராக வந்து கலந்து கொள்வாரே தவிர குடும்பத்தோடு வரமாட்டார். குடும்பத்தோடு தனியாக டூர் போவார். ஆனால், கம்பெனியோடு சேர்ந்து வரமாட்டார். இவருக்குத் தன்னுடைய சொந்த வாழ்க்கை வேறு. வேலை பார்க்கும் நிறுவனம் என்பது வேறு. இரண்டும் எண்ணெயும் தண்ணீரும் போல ஒன்றுடன் ஒன்று கலக்காது.

ஆலோசனைகளுக்கு வரவேற்பு

ஒரு திட்டத்தை இவர் தன் மனதில் உருவாக்கி வைப்பதற்கு முன்பு மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையைக் காது கொடுத்து கேட்பார். ஆனால், செயல் திட்டத்தை வடிவமைத்த பிறகு எவருடைய தலையிடும் இடையூறும் இவருக்கு இருக்கக் கூடாது. அதன் பிறகு இவர், எவர் சொல்வதையும் கேட்பதில்லை. தனது குழு உறுப்பினர்களை அல்லது பல பிரிவை சேர்ந்த பணியாட்களையும் அழைத்துப் பேசி அவரவர் பணிகளை அவர்களுக்குத் தெளிவாக விளக்கி, ஒருவர் பணியை ஒட்டி அடுத்தவருடைய பணிகள் இருக்கின்றன என்பதை எடுத்துரைத்து அவர்கள் இணக்கமாக வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டுவார். அதைப் புரிந்து கொண்டு ஒருவரும் விடுப்பு எடுக்காமல் அனைவரும் ஒரே சமயத்தில் ஒரே வேகத்தில் உற்சாகமாக வேலையை செய்து முடிக்க வேண்டும்.

நேர்மையின் இருப்பிடம்

விருச்சிக ராசி முதலாளி, தன்னுடைய கடமையில் நேர்மையாகவும் வார்த்தையில் உண்மையாகவும் இருப்பார். பணியாட்களை ஏமாற்ற மாட்டார். திறமைக்கேற்ற வேலை வேலைக்கேற்ற சம்பளம் கொடுப்பர். விருச்சிக ராசி முதலாளிக்கு அவரது பணியாட்களிடம் நல்ல பெயர் இருக்கும். பெண் பணியாளர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார். அப்சரஸ்களாக இருந்தாலும், மதி மயங்க மாட்டார். மன உறுதி படைத்தவர். வெற்றி ஒன்றே இவருடைய இலக்காக இருக்கும். தன் நிறுவனத்தை பெரியளவில் வளர்ப்பார். போட்டி நிறுவனங்களை இல்லாமல் செய்வார். தன் உயர்வுக்கு உதவாதவர்களை ஒதுக்கி விலக்கி விடுவார். பயனுள்ளவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு வெற்றி நடை போடுவார்.

The post விருச்சிக ராசி முதலாளி வெற்றியே இலக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: