மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை: சென்னை, சைதாப்பேட்டை, அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவரை கண்டித்தும், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மகாவிஷ்ணு மீது, இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வரும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மகாவிஷ்ணுவை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மகாவிஷ்ணுவிடம் சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து 5 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை (நாளை) புதன்கிழமை விசாரணைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: