அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில், ‘என்னுடைய சிறுவயதில் இந்தியாவில் உள்ள எனது தாத்தா – பாட்டியை பார்க்க சென்றேன். அப்போது ​​எனது தாத்தா என்னை காலை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வார். சமத்துவத்துக்காகப் போராடுவது மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறுவார்.

நடைபெற இருக்கும் அமெரிக்க தேர்தலில் எனது தாத்தா – பாட்டி கூறிய கருத்துகள், நாட்டின் எதிர்காலத்திற்கான போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. பொதுச் சேவையிலும், சிறந்த எதிர்காலத்துக்காகப் போராடும் எனது தாத்தாவின் அர்ப்பணிப்பும் இன்னும் உயிருடன் உள்ளன. அவர்களது அறிவுரைகள் அடுத்த தலைமுறையை கட்டமைக்கவும், ஊக்குவிக்கவும் எனக்கு உதவும். எனவே தேசிய தாத்தா பாட்டி தினமான இன்று, அனைத்து தாத்தா – பாட்டிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.

முன்னாள் அதிபர் டிரம்ப் – துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையேயான விவாதம் நாளை இரவு 9 மணியளவில் பிலடெல்பியாவில் உள்ள தேசிய அரசியலமைப்பு மையத்தில் நடைபெறுகிறது. அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசி, இந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்படும்; இந்த விவாதத்தின் போது பார்வையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த விவாதம் 90 நிமிடங்கள் நீடிக்கும் என்றும், இரண்டு முறை இடைவேளை இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: