துலீப் கோப்பை கிரிக்கெட் இந்தியா பி 321 ரன் குவிப்பு

பெங்களூரு: இந்தியா ஏ அணியுடனான துலீப் கோப்பை போட்டியில் இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 321 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் முஷீர் கான் அபாரமாக விளையாடி 181 ரன் விளாசினார். எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா ஏ அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்தியா பி அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 30, கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 13 ரன் எடுக்க, அடுத்து வந்த முன்னணி வீரர்களும் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். இதனால், இந்தியா பி அணி 43.5 ஓவரில் 94 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், முஷீர் கான் – நவ்தீப் சைனி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக விளையாடிய அறிமுக வீரர் முஷீர் கான் (19 வயது) சதம் விளாசி சாதனை படைத்தார். இவர் மும்பை வீரர் சர்பராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்திருந்தது.

முஷீர் 105 ரன், நவ்தீப் 29 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 205 ரன் சேர்த்து அசத்தியது. முஷீர் 181 ரன் (373 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்), யஷ் தயாள் 10, நவ்தீப் சைனி 56 ரன் (144 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா பி முதல் இன்னிங்சில் 321 ரன் குவித்து ஆல் அவுட்டானது (116 ஓவர்). இந்தியா ஏ பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 4, கலீல் அகமது, ஆவேஷ் கான் தலா 2, குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி, 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 36, கேப்டன் கில் 25 ரன்னில் வெளியேறினர். ரியான் பராக் 27 ரன், கே.எல்.ராகுல் 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

 

The post துலீப் கோப்பை கிரிக்கெட் இந்தியா பி 321 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: