யுஎஸ் ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டியில் இன்று சபலென்கா – பெகுலா பலப்பரீட்சை

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவுடன் உள்ளூர் நட்சத்திரம் ஜெசிகா பெகுலா இன்று மோதுகிறார். அரையிறுதியில் அமெரிக்காவின் எம்மா நவரோ (23 வயது, 12வது ரேங்க்) உடன் மோதிய சபலென்கா (26வயது, 2வது ரேங்க்), முதல் செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டில் எம்மா கடுமையாகப் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்டது.

அதில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 7-6 (7-2) என நேர் செட்களில் வென்று தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி ஒன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா (30 வயது, 6வது ரேங்க்), செக் குடியரசின் கரோலினா முச்சோவா (28 வயது, 52வது ரேங்க்) மோதினர். இருவருக்கும் முதல் யுஎஸ் ஓபன் அரையிறுதி என்பதால் முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட வேண்டும் என்று மல்லுக் கட்டினர்.

2 மணி, 12 நிமிட போராட்டத்தின் முடிவில் பெகுலா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் பைனலுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஆஸி. ஓபன் நடப்பு சாம்பியனான சபலென்கா, யுஎஸ் ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக பைனலில் விளையாட உள்ளனர். இருவரும் இதுவரை 7 முறை மோதியுள்ளதில் சபலென்கா 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார். யுஎஸ் ஓபன் போன்ற கடின தரை மைதானங்களில் நடந்த போட்டிகளில் இருவருமே தலா 2 வெற்றிகளைப் பெற்று சமபலத்தில் இருக்கின்றனர். அதனால் இன்றைய பைனலில் அனல் பறப்பது உறுதி.

 

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டியில் இன்று சபலென்கா – பெகுலா பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: