ரூ.2.25 கோடி கேட்டு கொலை மிரட்டல் ஓபிஎஸ் தம்பியிடம் போலீஸ் விசாரணை

தேனி: தேனி நகர் தென்கரையில் தெற்கு அக்ரஹாரத்தில் குடியிருப்பவர் நாகராஜன். பத்திர எழுத்தரான இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மிகவும் நெருங்கிய நண்பர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வத்துடன் மிக நெருக்கமாக இருந்து வந்த பத்திர எழுத்தாளர் நாகராஜன் கடந்த வாரம் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். இதில் நாகராஜன், தனது மகன் இளங்குமரன் தொழில் செய்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும் முன்னாள் ஆவின் தலைவரும், முன்னாள் பெரியகுளம் நகர்மன்றத் தலைவருமான ஓ.ராஜாவிடம் ரூ.4 கோடி கடன் பெற்றதாகவும், இத்தொகையை திருப்பிக் கொடுத்து விட்ட நிலையில் மேலும், ரூ.2 கோடியே 25 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இப்புகார் மனு மீதான விசாரணைக்காக பத்திர எழுத்தர் நாகராஜன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஆகியோருக்கு நேற்று முன்தினம் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு வரவேண்டும் என சம்மன் அனுப்பியது. ஆனால், ஓ.ராஜா வேறு பணி இருப்பதால் விசாரணைக்கு வர இயலாது என தெரிவித்ததால் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலை பத்திர எழுத்தாளர் நாகராஜன் மற்றும் ஓ.ராஜா ஆகியோர் தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி முன் ஆஜராகினர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, மீண்டும் வருகிற 10ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும், அன்றைய தினம் இருதரப்பும் நேரில் விசாரணைக்கு வரவேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர்.

 

The post ரூ.2.25 கோடி கேட்டு கொலை மிரட்டல் ஓபிஎஸ் தம்பியிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: