இறந்தவர்களின் பெயரை நீக்க வாக்குச்சாவடி அலுவலர்கள் மறுப்பு; உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் திமுகவின் வாக்குச்சாவடி அளவிலான முகவர்கள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டதாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதுபற்றி மக்களிடம் கேட்டோம்.

அதே முகவரியில் பல ஆண்டுகளாக வசித்து, வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இது மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பெயர் பதிவு அதிகாரி, நீக்கம் செய்யவுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு இந்தப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை.

எங்கள் கட்சியின் வாக்குச்சாவடி அளவிலான முகவர்கள், வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, இறந்த வாக்காளர்களை அடையாளம் கண்டு அது தொடர்பான பட்டியலை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். அந்தப் பெயர்களை நீக்கும்படி கோரியுள்ளனர். ஆனால் பெயர் நீக்கத்திற்காக, இறந்த வாக்காளர்களின் இறப்பு சான்றிதழை வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்கின்றனர். வருவாய்த்துறை அலுவலர்களே பெரும்பாலும் வாக்குச்சாவடி அலுவலர்களாக இருப்பதால், வருவாய்த்துறையின் பிறப்பு, இறப்பு ஆவணங்களை வைத்தே அதை அறிய முடியும்.

எனவே இந்தக் கடமையை செய்ய மறுத்து, இறப்பு சான்றிதழை வாக்குச்சாவடி அளவிலான முகவர்களிடம் கேட்கின்றனர். அதுகுறித்த 7ம் விண்ணப்பத்தை அளித்த பிறகும், இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்ய மறுக்கின்றனர். எனவே இதில் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. வாக்காளரின் பெயரை நீக்க நேரிட்டால் அதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவரிடம் நோட்டீஸ் அளிக்க வேண்டும். ஆனால் அப்படி செயல்படாமல் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. இது இயற்கை நீதிக்கு முரணானது. எனவே இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இறந்தவர்களின் பெயரை நீக்க வாக்குச்சாவடி அலுவலர்கள் மறுப்பு; உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: