டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு மருத்துவம் படித்த 31 வயது பெண் டாக்டர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவர் கொலையை தொடர்ந்து ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி பெண் டாக்டரின் பெற்றோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வழக்கு பதிவுசெய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது. தடயவியல், மருத்துவ நிபுணர்களுடன் டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் குழு இன்று கொல்கத்தா விரைகிறது. பெண் மருத்துவரின் உடற்கூறாய்வு அறிக்கையை ஆய்வு செய்யும் அதிகாரிகள், உடல் கிடந்த இடத்தையும் பார்வையிட உள்ளது
The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் விசாரணை தொடங்கியது சிபிஐ appeared first on Dinakaran.