இதை எதிர்த்து கடந்த ஒரு மாதமாக மாணவர் அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆளுங்கட்சியினருக்கும் மாணவர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் 300 பேர் பலியான நிலையில், மாணவர்களின் எதிர்ப்புக்கு பணிந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். அதோடு, பாதுகாப்பு கருதி தனது சகோதரியுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறினார். விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் வெளியேறியதைத் தொடர்ந்து, பிரதமர் மாளிகை, ஆளும் அவாமி லீக் கட்சியினரின் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இந்த அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர, வங்கதேசத்தில் உடனடியாக ராணுவம் ஆட்சிப் பொறுப்பேற்றது. மாணவர்கள் வன்முறையை கைவிட வேண்டுமெனவும், இடைக்கால அரசு விரைவில் அமைக்கப்படும் என்றும் ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்தார். அதே சமயம் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென மாணவர்கள் கெடு விதித்திருந்தனர்.
மாணவர்களின் இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, வங்கதேச நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீன் விடுத்த அறிக்கையில், ‘முப்படை தளபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக பிரதிநிதிகள், மாணவர் அமைப்பின் தலைவர்கள் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது. மேலும் மாணவர் அமைப்பினர் கோரிக்கைக்கு இணங்க முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியா வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்’ என கூறப்பட்டிருந்தது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் பொதுத் தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவரையிலும் அரசு நிர்வாகத்தை கவனிக்க இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக மாணவர் அமைப்பினரிடம் ராணுவ தளபதி ஜமான் மாலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இடைக்கால அரசுக்கு 84 வயதான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் பொறுப்பேற்க வேண்டுமென மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக போராட்டக் குழு தலைவர்களில் ஒருவரான நஹித் இஸ்லாம் என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசுக்கு பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும். அவருடன் 2 ஒருங்கிணைப்பாளர்கள் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். முகமது யூனுஸ் தவிர வேறு யாரையும் பொறுப்பேற்க வைத்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதிலும் மாணவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.
எனவே, விரைவில் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள யூனுஸ், ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ததை வரவேற்றுள்ளார். இது வங்கதேசத்திற்கு கிடைத்த 2வது சுதந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு நாட்டில் அமைதி திரும்ப ஒத்துழைப்பு தர வேண்டுமெனவும் யூனுஸ் வலியுறுத்தி உள்ளார். தற்போது வங்கதேசத்தில் வன்முறைகள் ஓய்ந்திருந்தாலும், தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. இடைக்கால அரசு அமைந்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ‘அதே இஸ்லாமியர்கள்’ தஸ்லிமா நஸ்ரீன் டிவிட்
மதவாதம், பெண்களின் சமத்துவம் குறித்த தனது புத்தகங்களுக்காக வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கடந்த 1994ல் நாடு கடத்தப்பட்டார். டெல்லியில் வசித்து வரும் தஸ்லிமா நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘இஸ்லாமியவாதிகளை மகிழ்விப்பதற்காக, கடந்த 1999ல் வங்கதேசத்தில் எனது தாய் மரணப்படுக்கையில் இருக்கும் போது அவரை பார்க்க வர எனக்கு அனுமதி தர ஹசீனா மறுத்தார்.
இன்று அதே இஸ்லாமியர்கள் மாணவர் அமைப்பில் உள்ளனர். ஹசீனாவின் நிலைமைக்கு அவரே காரணம். அவர் இஸ்லாமியர்களை வளர விட்டார். ஊழலில் ஈடுபட அனுமதித்தார். வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தானைப் போல ஆகக்கூடாது. ராணுவம் ஆட்சி செய்யக்கூடாது. மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை கொண்டு வர அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும்’’ என்றார்.
* எல்லை அருகே மக்கள் வரவேண்டாம்
வங்கதேசத்துடன் இந்தியா 4,096 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்கதேச எல்லைகள் மேற்கு வங்கம், திரிபுரா, மேகலாயா, அசாம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களை ஒட்டி வருகிறது. தற்போது வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேச எல்லை ஒட்டி, கிராமமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் குறிப்பாக இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் அளித்த பேட்டியில், ‘‘வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் மதவாதிகளால் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். அங்குள்ள இஸ்கான் கோயில்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பல இந்துக்களது வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. எனவே வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என கூறி உள்ளார்.
* வங்கதேசம் செல்லாதீர்கள்
வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால், அவசர தேவை இருந்தால் தவிர வேறெந்த காரணத்திற்காகவும் அந்நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணிக்க வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
* யார் இந்த முகமது யூனுஸ்?
இரும்பு பெண்மணியான ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு ஓடச் செய்த மாணவர் அமைப்பினர், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக 83 வயதாகும் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் மட்டுமே வேண்டுமென நிர்பந்திக்கின்றனர். வங்கதேச மாணவர்களை கவர்ந்த முகமது யூனுஸ் யார் என்பது பற்றி பார்ப்போம்… யூனுஸ், ஹசீனாவின் தீவிர எதிர்பார்ப்பாளர். 1940ம் ஆண்டு சிட்டகாங்கில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
பொருளாதார நிபுணரும், வங்கியாளருமான இவர் கடந்த 1983ல் கிராமின் வங்கியை நிறுவினார். வங்கியில் கடன் பெற தகுதியற்ற ஏழை மக்கள், தொழில்முனைவோருக்கு சிறு கடன் வழங்குவதுதான் கிராமின் வங்கிகள். அந்த சமயத்தில் எந்த உலக நாடுகளிலும் இதுபோன்ற சிறு கடன் வழங்கும் நிதி அமைப்புகள் இல்லை. யூனுஸின் இந்த முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. வங்கதேச மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதில் யூனுஸின் கிராமின் வங்கி பெரும் பங்காற்றியது.
இதைத் தொடர்ந்து மற்ற பல நாடுகளிலும் இது பரவியது. இதற்காக 2006ம் ஆண்டு யூனுஸுக்கு நோபல்பரிசு தரப்பட்டது. மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றிருந்த யூனுஸ் கடந்த 2007ல் அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இருந்தாலும் அதன்பிறகு தான் யூனுஸுக்கும் ஹசீனாவுக்கும் இடையே 2008ம் ஆண்டிலிருந்து பிரச்னை வெடித்தது. கிராமப்புற ஏழைப் பெண்களிடம் கடனை வசூலிக்க மோசமான வழிகளை யூனுஸ் பின்பற்றுவதாக ஹசீனா குற்றம்சாட்டினார்.
2011ல் யூனுஸின் வங்கி செயல்பாடுகளை ஹசீனா அரசு மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. மேலும், யூனுஸ் தனது நிறுவன ஊழியர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக வங்கி நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2013ல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்ததாக, நாட்டின் மிகப்பெரிய மொபைல் போன் நிறுவமான யூனுஸின் கிராமின்போன் நிறுவனம் பிரச்னைகளை சந்திக்கத் தொடங்கியது. யூனுஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் ஜாமீனில் வெளிவந்தார்.
* ஓட்டலுக்கு தீ வைத்ததில் 24 பேர் உயிருடன் கருகினர்
வங்கதேசத்தின் ஜோஷோர் மாவட்டத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஷாஹின் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதும், அவாமி கட்சியினரின் வீடு, கடைகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். அதன்படி, ஷாஹினின் ஓட்டலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அதில், ஓட்டலில் இருந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 24 பேர் உயிருடன் எரிந்து பரிதாபமாக இறந்துள்ளனர். அங்கிருந்து தப்பியவர்களில், மேலும் பலர் பலியாகியிருக்கக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
* பலி 440 ஆக அதிகரிப்பு இயல்பு நிலை திரும்பியது
வங்கதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்கனவே 300 பேர் பலியாகி இருந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 140 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பல இடங்களில் போலீசாருக்கும் மாணவர்கள், பொதுமக்களுக்கும் இடையே நடந்த சண்டையில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. பலரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்துள்ளனர் மற்றும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வரை நீடித்த வன்முறை நேற்று காலை அடங்கியது. தலைநகர் டாக்காவில் தெருக்கள், சாலைகளில் அமைதி திரும்பி இருக்கிறது. பேருந்து, ஆட்டோ ரிக்ஷாக்கள் இயக்கப்பட்டன. கடைகள், அலுவலகங்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டன. ஆனாலும் ஊழியர்கள் குறைந்த அளவிலேயே வந்துள்ளனர். சில பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ராணுவமும் போலீசாரும் உச்சகட்ட பாதுகாப்புடன் இயல்பு நிலையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
* நடுரோட்டில் கட்டி தொங்க விடப்பட்ட சடலங்கள்
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடையாளம் தெரியாத ஒரு சாலையில் நடைமேம்பாலத்தில் அடித்து கொல்லப்பட்ட 2 நபர்களின் சடலங்கள் தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்டிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற பல கொடூர சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், வங்கதேசம் மற்றொரு சிரியாவாக மாறி வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
The post பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில் வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு: ஜனாதிபதி முகமது சஹாபுதீன் அறிவிப்பு, இடைக்கால அரசு அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.